காலி மதுபாட்டிலுக்கு ரூ.10 தமிழகம் முழுவதும் அமல்
டாஸ்மாக்கில் காலி மதுபாட்டில்களை திரும்ப அளித்தால் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 அளிக்கப்படுகிறது. இத்திட்டம் தற்போது பெரம்பலூர், அரியலூர், நீலகிரி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அமலில் உள்ளது. தமிழகம் முழுவதும் இத்திட்டம் வரும் நவம்பர் மாதத்திற்குள் விரிவாக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
தென் மாவட்டங்கள் செல்வோர் மாற்று வழிகளை பயன்படுத்த போலீசார் அறிவுறுத்தல்
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு மாவட்டம் புக்கத்துறை, படாளம் பகுதியில் மேம்பாலக் கட்டுமானம் மற்றும் சாலை விரிவாக்கம் நடப்பதால் வாகன நெரிசல் ஏற்படும்.
தொடர் விடுமுறையால் ஊருக்கு செல்வோர் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட மாற்று வழிகளையும் பயன்படுத்த போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
2 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மலையாள நடிகை மினு முனீர் கைது
10 வருடங்களுக்கு முன்பு உறவினரின் 14 வயது மகளை நடிக்க வைப்பதாக கூறி, சென்னைக்கு அழைத்து வந்தநிலையில், அந்த சிறுமிடம் 4 பேர் அத்துமீறியதாக கூறப்படுகிறாது.
இதனைத்தொடர்ந்து நடிகை மினு முனீர் மீது பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்தநிலையில் சென்னை திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மலையாள நடிகை மினு முனீரை கேரளாவில் கைது செய்த திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர்.
தூய்மைப்பணியாளர்கள் கைது விவகாரம்: சென்னையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியதாவது:-
போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை இரவோடு இரவாக காவல்துறை அப்புறப்படுத்தியது முற்றிலும் சட்டத்திற்கும், நியாயத்திற்கும் புறம்பானது; அத்துமீறிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு தூய்மைப் பணியாளர்களின் பிரச்னைகளுக்கு நியாயமான தீர்வு காண வேண்டும். சென்னையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தூய்மை பணியாளர்கள் கைது - தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கையில், “12 நாட்களாக சம்பள உயர்வுக்காகவும், நிரந்தர பணி வழங்கிடவும் போராடிய தூய்மை பணியாளர்களை இரவோடு இரவாகக் கைது செய்தது மிக மிக கண்டனத்திற்குரியது.
உடனடியாக முதல்-அமைச்சரும், துறை சார்ந்த அமைச்சர்களும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்துகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மை பணியாளர்கள் நலனுக்காக 6 புதிய திட்டங்கள்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் நிதி அமைச்சர் தங்கம் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “தூய்மை பணியாளர்கள் மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கரிசனத்துடன் இருக்கிறார். தூய்மை பணியாளர்களின் நலனை காப்பதில் அரசு உறுதியாக உள்ளது. தூய்மை பணியாளர்களின் நலவாரியம் சிறப்பாக செயல்படுவதை அரசு உறுதி செய்துள்ளது” என்று தெரிவித்தார்.
சினிமாவில் பாலியல் தொந்தரவு இருக்கிறதா? நடிகை சுவாசிகா ஓபன் டாக்
தமிழில் 'வைகை' படத்தின் மூலமாக சினிமா உலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை சுவாசிகா. மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், 'லப்பர் பந்து' படத்தில் தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்டார். தொடர்ந்து 'மாமன்', 'ரெட்ரோ' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது சூர்யாவின் 'கருப்பு' படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
வெப்சீரிஸ், சினிமா என பிசியாக சுற்றி வரும் சுவாசிகா அண்மையில் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சினிமாவில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு இருப்பதாக கூறப்படுகிறதே? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சுவாசிகா, “நான் 15 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். இதுவரை அப்படி ஒரு பிரச்சினையை நான் சந்திக்கவில்லை. மேலும் சினிமாவில் மட்டுமே அல்ல, எல்லா துறைகளிலும் இந்த பிரச்சினை இருக்கிறது” என்று அவர் கூறினார்.
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை விடுதலை செய்தது இலங்கை கோர்ட்டு
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை தலா ரூ.1.75 லட்சம் அபராதம் விதித்து நிபந்தனைகளுடன் இலங்கை மன்னார் கோர்ட்டு விடுதலை செய்துள்ளது. மேலும் அபராதத்தை கட்டத் தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுதந்திர தினம்: ஞாயிறு அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை அரசு விடுமுறை தினம் என்பதால் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.