குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை வெறிநாய் கடித்ததால் பரபரப்பு
வெறிநாய் கடித்ததில் 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.;
கோப்புப்படம்
தென்காசி,
சமீபகாலமாக குற்றாலத்தில் வெறிநாய்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இவை ஆங்காங்கே அருவி, சாலையோரங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன. சாலைகளில் நடந்து செல்வோர், இருசக்கர வாகன்ங்களில் செல்வோரை இந்த நாய்கள் துரத்தி செல்வதால், சுற்றுலா பயணிகள் பீதியுடன் நடமாடி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த பெருமாள் சாமி, புளியங்குடி பகுதியை சேர்ந்த மைக்கேல், கீழப்பாவூர் பகுதியை சேர்ந்த செல்வம், சிவகங்கை பகுதியை சேர்ந்த சகாதேவன், காசிமேஜர்புரம் பகுதியை சேர்ந்த சவுமியா மற்றும் கருப்பசாமி உள்ளிட்ட 6 நபர்களையும், 2 சிறுவர்களையும் வெறிநாய்கள் துரத்தி, துரத்தி கடித்த சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதில் காயமடைந்த அந்த 8 பேரும் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.