அலங்கார வளைவு சரிந்து விழுந்து விபத்து - நூலிழையில் தப்பிய எடப்பாடி பழனிசாமி

திருவண்ணாமலை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.;

Update:2025-08-16 18:21 IST

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணி, வந்தவாசி, செய்யாறு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இன்று திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினருடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.

அதனை தொடர்ந்து திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட செங்கம் சட்டமன்ற தொகுதியில் மக்களை சந்திக்க எடப்பாடி பழனிசாமி தனது வாகனத்தில் புறப்பட்டு சென்றார். செங்கம் பகுதியில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று சாலையின் இருபுறமும் அதிமுக பேனர்கள், அலங்கார வளைவுகள், கொடிகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி செங்கம் நோக்கி பேருந்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு ஒன்று அவர் கடந்து சென்ற சில நொடிகளில் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் எடப்பாடி பழனிசாமியின் பேருந்துக்கு பின்னால் வந்த வாகனங்கள் மீது பேனர் விழுந்தது. மேலும் நூலிழையில் எடப்பாடி பழனிசாமி தப்பினார்.

இதனை அறிந்த எடப்பாடி பழனிசாமி தனது வாகனத்தை உடனே நிறுத்தி பேனர் விழுந்த இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்