சண்முக விலாச மண்டபத்திற்குள் சென்ற பக்தர்கள்... திருச்செந்தூர் கோவிலில் பரபரப்பு

தொடர் விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.;

Update:2025-08-16 19:26 IST

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். திருவிழா மற்றும் சில முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

இந்த நிலையில், ஆடி கிருத்திகை மற்றும் கிருஷ்ணர் ஜெயந்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கிடையில், திருச்செந்தூர் கோவிலில் சண்முக விலாச மண்டபத்திற்குள் காலையில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாலை 1 மணி முதலே பக்தர்கள் காத்திருந்த நிலையில், காலை 6.30மணி அளவில், சண்முக விலாச மண்டபத்தில் புதிதாக போடப்பட்ட இரும்புக்கதவை திறந்து சிலரை அழைத்துச் சென்றதாக பக்தர்கள் கொந்தளித்தனர். இதனால் பாதுகாவலர்களுக்கும் பக்தர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சண்முக விலாச மண்டபத்தின் முன்னால் போடப்பட்ட இரும்பு கதவை வலுக்கட்டாயமாக திறந்து மண்டபத்திற்குள் சென்றனர். காவல்துறையினர் அங்கு வந்து நீண்ட நேரம் போராடி பக்தர்களை வெளியே அழைத்துச் சென்றனர். இதனால் கோவில் வளாகத்தில் பரபரப்பு நிலவியது. நீண்டநேரம் காத்திருந்ததால் பக்தர்கள் காத்திருக்க முடியாமல் உள்ளே செல்ல முயற்சித்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்