திமுகவின் பாவமூட்டைகளை திருமாவளவன் சுமக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி
திமுக ஆட்சியில் 51 மாதங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.;
திருவண்ணாமலை,
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக இன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதியில் மக்கள் மத்திய எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
திமுக ஆட்சியில் 51 மாதங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் பெரிய திட்டங்கள் எதுவும் கொண்டுவரப்படவில்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்துள்ளது. எங்கு பார்த்தாலும் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் பல லட்சம் மதிப்பில் ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டித் தரப்படும், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு இழப்பீடு வழங்கப்படும். விவசாயிகளில் பாதுகாப்புக்கு அதிமுக அரசால் மட்டுமே உறுதி தர முடியும். அனைத்து தரப்பு மக்களையும் அடிப்படை வசதிகள், பெண்கள் பாதுகாப்பு, வேலை வாய்ப்பிற்காக தெருவில் இறங்கி போராடவிட்ட திமுக அரசுக்கு மக்கள் புகட்டப் போகும் பாடம் தான் 2026 சட்டமன்றத் தேர்தல்.
திமுகவின் பாவமூட்டைகளை திருமாவளவன் சுமக்க வேண்டாம். மக்கள் மத்தியில் ஒரு மரியாதை உள்ளது; அதை திருமாவளவன் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். சேரக்கூடாத இடத்தில் சேர்ந்துவிட்டு, வேறு வழியின்றி அவர்கள் சொல்வதையே திருமாவளவன் பேசுகிறார்.
நீங்கள்தான் (திமுக) உத்தமர் என்று சொல்லுறீங்க, திறந்துவிடுங்கள் என்ன தப்பு இருக்கிறது. பயம் இல்லை.. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்கிறீர்கள்; பிறகு எதற்கு அமைச்சர் அறையை பூட்டு போட்டு பூட்டி வைக்கிறீங்க; அமலாக்கத்துறை சோதனை செய்துவிட்டு போகட்டும். இவ்வாறு அவர் கூறினார்.