செயற்கை நுண்ணறிவால் ஏற்பட்டுள்ள புது குழப்பம்

செயற்கை நுண்ணறிவு நுழையாத துறையே இல்லை என்ற நிலை வந்துள்ளது.
1856-ம் ஆண்டு பிறந்து 1915-ம் ஆண்டு மே மாதம் வரை வாழ்ந்த அமெரிக்க எழுத்தாளர் எல்பர்ட் ஹப்பார்டு கூறிய பல நன்மொழிகள் இன்றும் உலகளவில் பல மேற்கோள்களுக்கு துணையாக இருக்கின்றன. “ஒரு எந்திரம் 50 சாதாரண மனிதர்களின் வேலையை செய்து விடும். ஆனால் அசாதாரணமான மனிதனின் வேலையை எந்த எந்திரத்தினாலும் செய்ய முடியாது’’ என்று சொன்னார்.
ஆனால் இன்றைய ஏ.ஐ. என்று சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவு அசாதாரண மனிதன் செய்வதை விடவும் பல மடங்கு வேலைகளை அதிகமாக செய்து வருகிறது. இப்போது செயற்கை நுண்ணறிவு நுழையாத துறையே இல்லை என்ற நிலை வந்துள்ளது.
சீனாவில் இப்போது மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஒரு ஓய்வு பெற்ற கட்டிடத் தொழிலாளி தனது வழக்கமான நீரிழிவு மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றார். 3 நாட்களுக்கு பிறகு அவருக்கு அந்த ஆஸ்பத்திரியின் கணைய சிகிச்சைத் துறை தலைவரான மருத்துவ நிபுணரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது.
அந்த தொழிலாளியை மேல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்தார். அவர் ஆச்சரியத்துடன் அங்கு சென்றபோது, அந்த டாக்டர் அந்த தொழிலாளியிடம் அவரது சி.டி. ஸ்கேனை செயற்கை நுண்ணறிவால் இயங்கும் கருவி மூலம் சோதனை செய்தபோது, கணையத்தில் ஒரு சிறிய புற்றுநோய் கட்டி இருப்பதை கண்டுபிடித்தார். கணையத்தில் உள்ள புற்றுநோய் கட்டிக்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் அந்த கருவி கண்டுபிடித்துள்ளது.
டாக்டர்களின் வழக்கமான பரிசோதனையில் தப்பும் சிறிய கட்டியைக் கூட ஏ.ஐ. தொழில்நுட்பம் கண்டுபிடித்து உயிரைக் காப்பாற்றிவிடும் என்ற அபரிமிதமான நன்மை இருந்தாலும், அதே செயற்கை நுண்ணறிவு பல தீய செயல்களுக்கும் துணைபோவது வேதனை அளிக்கிறது. எலான் மஸ்கின் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் ‘குரோக்’ என்ற செயற்கை நுண்ணறிவு தளம் பயன்படுத்தப்படுகிறது.
இதைக் கொண்டு ஒரு பெண்ணின் புகைப்படத்தில் அவரது ஆடைகளைக் கழட்டி நிர்வாணப்படுத்தவும் முடியும். அவருக்கு வேறு கவர்ச்சிகரமான ஆடைகளை உடுத்தி அழகு பார்க்கவும் முடியும். முகத்தையும் மாற்ற முடியும். இந்த தளத்தை பயன்படுத்தி எந்த பெண்ணின் படத்தையும் தவறாக பயன்படுத்தும் வகையில் மாற்ற முடியும். இதனால் பல பெண்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சிவசேனா கட்சியின் பெண் எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, ‘செயற்கை நுண்ணறிவால் பெண்களுக்கு ஏற்படும் இந்த களங்கத்தைப் போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதினார். அதன் தொடர்ச்சியாக மத்திய அரசு, ‘எக்ஸ்’ தளத்திற்கு ஒரு நோட்டீசு அனுப்பி உள்ளது.
அதில் ஏ.ஐ. கருவிகள் உள்பட எந்த வழியிலும் பெண்களின் நிர்வாண, பாலியல் வெளிப்படையான உள்ளடக்கங்கள் எதையும் உருவாக்குதல், பரப்புதல் கூடாது. அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினைக்கு பாதுகாப்பு ஏற்பாட்டு அமைப்பில் உள்ள சில குறைபாடுகள்தான் காரணம் என்று தெரிவித்த குரோக் நிறுவனம், இதை சரி செய்து வருகிறோம் என்று தெரிவித்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவால் எண்ணற்ற நன்மைகள் இருக்கும் நிலையில், அதில் இருக்கும் குறைபாடுகளும் முழுமையாக களையப்பட வேண்டும்.



