எங்களைப்பற்றி
1942ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி அமரர் சி.பா. ஆதித்தனார் அவர்களால் முதன் முதலாக மதுரை மாநகரில் தினத்தந்தி தொடங்கப்பட்டது. அன்று முதல், தமிழக மக்களின் வாழ்க்கையோடும் தமிழக வரலாற்றோடும் இரண்டறக்கலந்து விட்டது தினத்தந்தி. 'தந்தி' தொடங்கப்பட்டபோது, இரண்டாவது உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டு இருந்தது. போர்ச்செய்திகளை வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கியது தந்தி. இந்தியாவிலும், அகில உலகிலும் அடுக்கடுக்காக எத்தனையோ வரலாற்று நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.வல்லரசு நாடுகளிலும், பிற நாடுகளிலும் பற்பல ஆட்சி மாற்றங்கள் நடந்தன. பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. இந்திய வரலாற்றிலும் பல திருப்பங்கள் ஏற்பட்டன.
டெல்லியிலும் தமிழ்நாட்டிலும், மற்ற மாநிலங்களிலும் எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. பண்டித நேரு, லால்பகதூர் சாஸ்திரி, பெரியார், ராஜாஜி, பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், எம்.ஜி.ஆர்., தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் போன்ற தலைவர்கள் தங்கள் சாதனைகளை சரித்திரத்தில் பொறித்துவிட்டு மறைந்தார்கள். இந்திரா காந்தியும் அவரது திருமகன் ராஜீவ் காந்தியும் கொடியவர்களின் குண்டுகளை உடலில் தாங்கி தேசத்துக்காக இன்னுயிர் ஈந்தனர். மூன்று போர்களை இந்தியா சந்தித்தது. நாள்தோறும் நடந்த வரலாற்று நிகழ்ச்சிகளை, தமிழ் மக்களுக்கு சுடச்சுட தினத்தந்தி வழங்கியது. தொடர்ந்து வழங்கிக்கொண்டு இருக்கிறது.
டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் தலைமையில் இயங்கிய தினத்தந்தி தற்போது அவர்களது மகன் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்கள் தலைமையில் ஒவ்வொரு நாளும் புத்தம் புது மலராக மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருக்கிறது. சென்னை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, திருப்பூர், தஞ்சை, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை, சேலம், ஈரோடு, வேலூர், கடலூர், பாண்டிச்சேரி, பெங்களூர், மும்பை என 16 பதிப்புகளில் (ABC July-Dec 2017) தினமும் 15,71,782 பிரதிகள் விற்று தமிழில் நம்பர் 1 நாளிதழாக வலம் வருகிறது.
தினத்தந்தி இடையில் எத்தனையோ போட்டிகள்... பொறாமைகள், அடுத்தடுத்து பல தடைகள் வந்த போதும் அத்தனையும் தகர்த்தெறிந்து, இன்று இந்தியாவின் நம்பர் 1 தமிழ் நாளிதழாக வெற்றி நடைபோடுகிறது தினத்தந்தி. எந்த ஒரு தமிழ் நாளிதழும் இதுவரை செய்திராத சாதனை நிகழ்த்தி, தமிழ் வாசகர்களின் மேலான ஆதரவுடன் தலைநிமிர்ந்து நிற்கிறது.
தினத்தந்தி. "தினத்தந்தி" www.dailythanthi.com என்ற முகவரி மூலம் 1999 ஆம் ஆண்டு முதல் இணையதளம் மூலம் தனது சேவையை தொடங்கியது. இணைய தளம் மூலம் உலகெங்கும் உள்ள லட்சகணக்கான தமிழர்களுக்கு தனது சேவையை தொடர்ந்து செய்து வருகிறது.
தற்போது உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் புதுப்பொலிவுடன் இணையதளத்தை மாற்றி அமைத்து உள்ளது.வாசகர்கள் எளிதில் படிக்கும் வகையில் யுனிகோடு எழுத்துரு வசதியுடனும். தாங்கள் படிக்கும் செய்திகளை தங்களது நண்பர்களுக்கு அனுப்பும் வகையிலும் வடிவமைக்கபட்டு உள்ளது.