தலையங்கம்

அரசு ஆஸ்பத்திரிகளில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள்


அரசு ஆஸ்பத்திரிகளில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள்
12 July 2025 3:32 AM IST

இந்த சிகிச்சையை ஒரு முறை எடுக்கமட்டுமே ரூ.3 லட்சம் செலவாகும்.

எல்லா செல்வங்களுக்கும் மேலான செல்வம் மழலை செல்வம்தான். அதனால்தான் நமது முன்னோர்கள் அந்த காலத்திலேயே ஆசைக்கு ஒரு பெண், ஆஸ்திக்கு ஒரு ஆண் என்று அளவான குடும்பத்தைப்பற்றி குறிப்பிடுவார்கள். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அய்யன் வள்ளுவர் 'குழல்இனிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்' என்று கூறியுள்ளார். இதற்கு கலைஞர் கருணாநிதி எழுதிய விளக்க உரையில், தங்களின் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும்தான் இனிமையானவை என்று கூறுவார்கள் என்று குழந்தையின் மழலை சொல்லின் சிறப்பு குறித்து கூறியிருக்கிறார்.

ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் திருமணமான சில மாதங்களிலேயே உற்றார், உறவினர்கள் மட்டுமல்லாமல் எல்லோருமே பெண் கர்ப்பமாக இருக்கிறாரா? என்று கேள்வி மேல் கேள்விகளை கேட்க தொடங்கிவிடுவார்கள். அதிலும் இப்போது கருத்தரிப்பு விகிதம் குறைந்துவிட்டது என்று ஐ.நா. அறிக்கையிலேயே கூறப்பட்டுள்ளது. குழந்தை பேறு இல்லாதவர்கள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார்கள். தத்தெடுப்பதற்காக குழந்தைகளை கேட்கும் தம்பதிகளின் பட்டியல் மிக நீளமாக இருப்பதால் பல ஆண்டுகள் காத்திருக்கும் நிலை இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க தம்பதிகள் மருத்துவ நிபுணர்களிடம் மருத்துவ சிகிச்சை பெற்றும் பலனளிக்கவில்லையென்றால் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால் இந்த முயற்சிகளை வசதி படைத்தவர்களால் மட்டுமே எடுக்கமுடியும் என்ற நிலை இருக்கிறது.

இந்த சிகிச்சையை எல்லா அரசு ஆஸ்பத்திரிகளிலும் பெறமுடியாது. அரசு ஆஸ்பத்திரி என்று எடுத்துக்கொண்டால் சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் மட்டும் இந்த வசதி இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் 697 தனியார் ஆஸ்பத்திரிகளில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் இருக்கின்றன. இதில் 175 மையங்கள் சென்னையிலும், 69 மையங்கள் கோவையிலும், 41 மையங்கள் மதுரையிலும், 40 மையங்கள் சேலத்திலும், 32 மையங்கள் திருச்சியிலும், 30 மையங்கள் ஈரோட்டிலும், 23 மையங்கள் கன்னியாகுமரியிலும், 16 மையங்கள் விருதுநகரிலும், 14 மையங்கள் தர்மபுரியிலும் மீதம் உள்ளவை மற்ற மாவட்டங்களிலும் இருக்கின்றன. இந்த சிகிச்சைக்கான செலவை சாதாரண குடும்பங்களில் உள்ளவர்களால் கொடுக்கமுடியாது. காரணம் இந்த சிகிச்சையை ஒரு முறை எடுக்கமட்டுமே ரூ.3 லட்சம் செலவாகும். அதுவும் கணவன் மனைவி இருவருக்குமே ஆரோக்கியமான விந்தணு, கருமுட்டை இருந்தால் மட்டுமே சிகிச்சைக்கு ரூ.2 லட்சமும், மருந்துகளுக்கு ரூ.1 லட்சமும் ஆகும்.

கூடுதல் சிகிச்சை தேவைப்பட்டால் சிகிச்சைக்கு ரூ.3 லட்சமும், மருந்துகளுக்கு ரூ.2 லட்சமும் செலவாகும். ஏழை தம்பதிகளால் இவ்வளவு பெரிய தொகையை செலவிடமுடியாது என்பதால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காதா? என்பது பொதுவான ஏக்கமாக இருக்கிறது. ஆனால் அரசு ஆஸ்பத்திரிகளில் இந்த செயற்கை கருத்தரிப்பு மையங்கள் இருந்தால் இலவசமாக சிகிச்சை அளிக்கமுடியும். கட்டணம் வசூலித்தால் ஒரு முறைக்கு ரூ.1 லட்சத்துக்கும் குறைவாகவே செலவாகும். மேலும் முதல்-அமைச்சரின் முழுமையான காப்பீட்டு திட்டத்தில் இந்த சிகிச்சையையும் சேர்த்தால் ஏழை, நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனளிக்கும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளிலும் செயற்கை கருத்தரிப்பு மையங்களை தொடங்கும் பரிசீலனை அரசிடம் இருக்கிறது. மேலும் சென்னையில் உள்ள அரசு சித்த மருத்துவமனையில் சித்த மருத்துவம் மூலமாக இயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையம் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இந்த இரு வசதிகளையும் விரைவில் தொடங்கவேண்டும் என்பது குழந்தை பேறு இல்லாதவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.