சிறுமிக்கு பாலியல் தொல்லை: கேரள நடிகை கைதான வழக்கில் போலீசார் குழப்பம்

கேரள நடிகை கைதான வழக்கில் போலீசார் குழப்பம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.;

Update:2025-08-16 20:51 IST

சென்னை,

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் மீனு குரியன் என்ற மீனு முனிர். மலையாள திரைப்பட நடிகையான இவர், 2014-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்து வந்த தனது உறவினரின் 16 வயது மகளை, பள்ளி விடுமுறையில் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி சென்னைக்கு அழைத்து வந்தார்.

பின்னர் அண்ணா நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அந்த சிறுமியை அழைத்துச்சென்றார். ஓட்டல் அறையில் இருந்த 5 பேரிடம் சிறுமியை அறிமுகம் செய்த நடிகை மீனு குரியன், அந்த சிறுமியை சினிமாவில் நடிக்க வைப்பது குறித்து அவர்களுடன் பேசினார். அப்போது அங்கிருந்த 4 பேரில் ஒருவர், சிறுமியின் கன்னத்தில் கிள்ளியும், மற்றொருவர் சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தும் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, அங்கிருந்து அலறி அடித்து வெளியே ஓடிவிட்டார். அதன்பிறகு கேரளா சென்ற சிறுமி, பயம் காரணமாக இதுபற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்தார். இந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தனது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனுமதியுடன் கடந்த 2024-ம் ஆண்டு எர்ணாகுளம் மூவாட்டு புழா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் கேரள மாநில போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சிறுமிக்கு பாலியல் கொடுத்த சம்பவம் சென்னை அண்ணா நகர் பகுதியில் நடந்ததால் இந்த வழக்கு சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, இதுபற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தார்.

இந்தநிலையில் கேரள மாநிலம் சென்ற அவர், நடிகை மீனு குரியனை கைது செய்து சென்னை அழைத்து வந்தார். இது குறித்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கைதான நடிகை மீனு குரியனிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

ஆனால் புகார் கொடுத்துள்ள இளம்பெண், சம்பவம் நடந்த போது சிறுமியாக இருந்ததால் சென்னையில் அவர்கள் தங்கிய வீடு மற்றும் ஓட்டல் குறித்த விவரம் தனக்கு தெரியவில்லை என்று கூறியதாக தெரிகிறது. நடிகை தரப்பில், அது போன்ற ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. இது பொய் புகார் என கூறுகின்றனர். இந்த வழக்கில் சம்பவ இடம், குற்றவாளிகள், சாட்சிகள் உள்ளிட்டவை இல்லாததால் மகளிர் போலீசார் குழப்பமடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக நடிகை மீது வழக்கு தொடரப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்