தேசிய கொடியேற்ற விடாமல் தடுப்பு; பட்டியலின ஊராட்சி மன்ற தலைவருக்கு நேர்ந்த அவலம்
பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் தேசியக் கொடியேற்ற அனுமதிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.;
வேலூர்,
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள கல்லப்பாடியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று (ஆகஸ்ட் 15, 2025) சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லப்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷ், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர், தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியரால் அழைக்கப்பட்டிருந்தார்.
ஆனால், பள்ளிக்கு வந்த ரமேஷைப் புறக்கணித்து, அவருக்கு பதிலாக மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரும், பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் முன்னாள் தலைவருமான ஒரு நபர் தேசியக் கொடியை ஏற்றியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷ் தலைமை ஆசிரியரிடம் கேள்வி எழுப்பியபோது, முறையான பதில் அளிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், தான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் தேசியக் கொடியேற்ற அனுமதிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.