சனாதனம் ஒற்றுமையை வலியுறுத்துகிறது: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
பாரதம் என்பது சனாதன தர்மம் வாழும் பூமி என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.;
சென்னை
சனாதனம் என்பது ஒற்றுமையை வலியுறுத்துவது மட்டுமே, பிரிவினையை ஏற்படுத்துவதற்கானது அல்ல என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். சென்னை, அடையாறில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி இவ்வாறு பேசினார். கவர்னர் ரவி மேலும் கூறியதாவது: உலகில் அறிவு மற்றும் ஆன்மீகத்தை வேத நூல்கள் மூலம் கண்டறிந்தது பாரத நாடு மட்டுமே ஆகும். மொழி, உணர்வு, உடையில் மாறுபாடு இருக்கலாம்.ஆனால், இந்தியா முழுவதும் ரிஷிகள் பரவியிருந்தனர். அவர்கள் போதித்தது, நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதுதான். வேதங்கள் மூலமாகவே நாடு ஒருங்கிணைக்கப்பட்டது. பாரதம் என்பது சனாதன தர்மம் வாழும் பூமி என்று கூறினார்.
சனாதனம் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி பேசுவது இது முதல் முறையல்ல. கடந்த மாதம் காட்டாங்குளத்தூரில் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவர்னர் ரவி கூறியதாவது: “சைவ சித்தாந்தம் தமிழுக்கு அடையாளமாக இருக்கிறது. பக்தி நிலை மூலமாகத்தான் சிவனை அடைய முடியும். பக்தியின் மூலம் ஆன்மிகம் காக்கப்பட்டுள்ளது. சைவ சித்தாந்தத்தில் சமூக வேறுபாடு இல்லை. சனாதன தர்மம் என்பது ஆன்மிகத்தின் அடையாளமாக இருக்கிறது. அதேபோல், சனாதனம் அனைவரும் ஒன்று என்பதை வலியுறுத்துகிறது” என்று கூறியிருந்தார்.