அன்புமணி வணக்கம் என்றார்; நானும் வணக்கம் என்றேன்; ராமதாஸ் விளக்கம்
அன்புமணி ராமதாஸ் தனது குடும்பத்துடன் நேற்று தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றார்.;
விழுப்புரம்,
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டாக்டர் ராமதாசும்,, அன்புமணி ராமதாசும் சந்திப்பதை தவிர்த்து வருகின்றனர். மேலும் டாக்டர் ராமதாசும், அன்புமணி ராமதாசும் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது மனைவி சவுமியா, 3 மகள்கள், பேரக்குழந்தைகளுடன் காரில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை தந்தார். நேற்றைய தினம் டாக்டர் ராமதாசின் மனைவி சரஸ்வதியின் பிறந்த நாள் என்பதால் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தனது தாயார் சரஸ்வதியுடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.
அப்போது டாக்டர் ராமதாஸ் உடன் இருந்தார். பின்னர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், குடும்பத்தோடு தாயார் சரஸ்வதியிடம் ஆசி பெற்றார். தொடர்ந்து சில மணி நேரம் குடும்பத்தினருடன் அவர் பேசினார். அதன் பிறகு இரவு 8.45 மணியளவில் அன்புமணி ராமதாஸ் குடும்பத்தோடு தைலாபுரம் தோட்டத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச்சென்றார்.
நாளை டாக்டர் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அன்புமணி ராமதாஸ், குடும்பத்துடன் தைலாபுரம் வந்து சென்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் நேற்றைய தினமும் தந்தை ராமதாசை அன்புமணி குடும்பத்துடன் சந்தித்து சமாதானம் செய்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் அன்புமணியின் வருகை குறித்து டாக்டர் ராமதாஸ் விளக்கம் அளித்து கூறியதாவது:-
நேற்று தைலாபுரம் இல்லத்திற்கு வந்து இருந்த அன்புமணி வணக்கம் சொன்னார். நானும் வணக்கம் என்றேன்; அதைத் தவிர வேறு எந்த பேச்சும் இல்லை. வணக்கத்தை வரவேற்பது இந்த வணக்கம், அந்த வணக்கத்தை வரவேற்பது, இவ்வளவு தானே. அன்புமணி என்னிடம் ஆசிர்வாதமெல்லாம் வாங்கவில்லை. அன்புமணியுடன் சமாதானம் ஏற்பட்டதாக கூறுவது பொய்.
சில விஷமிகள் வதந்திகளை தகவல்களை பரப்பி இருக்கின்றனர். திட்டமிட்டப்படி நாளை பொதுக்குழு நடைபெறும். கூட்டத்தில் முக்கியமான பல தீர்மானங்களை நிறைவேற்ற இருக்கிறோம். தவறாக பொதுக்குழு உறுப்பினர்கள் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பொதுக்குழுவில் குறைந்தது 4 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.