அரசு பஸ்சை வழிமறித்து கண்ணாடியை உடைத்த காட்டுயானை.. பயணிகள் அலறல்
அரசு பஸ் நோக்கி ஓடிவந்து பஸ்சின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடியை தாக்கி உடைத்தது.;
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் இருக்கும் பலா மரங்களில் சீசன் காரணமாக பழங்கள் காய்த்து குலுங்குகின்றன. எனவே பலாப்பழங்களை உண்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டுயானைகள் இங்கு வந்து முகாமிட்டுள்ளன. அதன்படி காட்டுயானைகள் குட்டிகளுடனும், தனியாகவும் அவ்வப்போது கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உலா வந்த வண்ணம் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு ஈரோட்டில் இருந்து கோத்தகிரி செல்வதற்காக மலைப்பாதையில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பஸ் தட்டப்பள்ளம் அருகே சென்று கொண்டிருந்தபோது, காட்டு யானை ஒன்று சாலையின் குறுக்கே நின்று கொண்டிருந்தது. காட்டு யானையை கண்ட அரசு பஸ் டிரைவர் பஸ்சை சற்று தொலைவிலேயே பாதுகாப்பாக நிறுத்தினார்.
இதையடுத்து அந்த காட்டுயானை அரசு பஸ்சை வழிமறித்தபடி நின்று, திடீரென அரசு பஸ் நோக்கி ஓடிவந்து பஸ்சின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடியை தாக்கி உடைத்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அச்சமடைந்து அலறினர். தொடர்ந்து பஸ்சின் இருக்கைகளுக்கு நடுவே மறைவாக அமர்ந்துக்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிறிதுநேரத்திற்கு பின் அந்த காட்டு யானை அங்கிருந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதன்பிறகுதான் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். தொடர்ந்து பஸ் கோத்தகிரிக்கு புறப்பட்டு சென்றது.