தூத்துக்குடி: கலெக்டர் தேசிய கொடியை ஏற்றினார்; போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
தூத்துக்குடி தருவை மைதானத்தில் நேற்று 79வது சுதந்திர தின விழா நடைபெற்றது.;
தூத்துக்குடி தருவை மைதானத்தில் நேற்று 79வது சுதந்திர தின விழா நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி ஆயுதப்படை காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
போாலீஸ் இன்ஸ்பெக்டர் சுனைமுருகன் தலைமையில் ஆயுதப்படை காவல்துறையினரின் 1வது படைப்பிரிவின் கமாண்டராக சப்-இன்ஸ்பெக்டர் பிரம்மநாயகம், 2வது பெண் காவலர்கள் படைப்பிரிவின் கமாண்டராக சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி மற்றும் 3வது படைப்பிரிவின் கமாண்டராக சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்து, காவல்துறை அணிவகுப்பு மிக கம்பீரமாக நடைபெற்றது.
இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த திருச்செந்தூர் உட்கோட்ட டி.எஸ்.பி. மகேஷ்குமார், கோவில்பட்டி உட்கோட்ட டி.எஸ்.பி. ஜெகநாதன் உட்பட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவல்துறையினர், காவல் அமைச்சுப் பணி அலுவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 69 பேருக்கு மாவட்ட கலெக்டர் இளம்பகவத் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். மாவட்ட கலெக்டரின் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற காவல்துறையினரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.