தமிழ் மீது தீராத பற்று கொண்ட பொற்றாமரை நாயகர்; இல.கணேசன் மறைவுக்கு எச். ராஜா இரங்கல்
இல.கணேசனின் குடும்பத்தினர் மற்றும் பா.ஜ.க.வின் ஒவ்வொரு தொண்டருக்கும் இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என எச். ராஜா தெரிவித்துள்ளார்.;
சென்னை,
நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் கீழே விழுந்து காயம் அடைந்ததற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதில் பலனின்றி நேற்று காலமானார். அவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர்களான அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல.கணேசன் இல்லத்துக்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் நேரு, மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
அதற்கு முன்பு, இல.கணேசன் இல்லத்திற்கு வந்து அவரது உடலுக்கு தமிழக கவர்னர்.ஆர்.என்.ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இல.கணேசனின் உடல் நாளை மாலை சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோன்று இல.கணேசன் மறைவுக்கு, பா.ஜ.க. மூத்த நிர்வாகி மற்றும் முன்னாள் தேசிய செயலாளரான எச். ராஜாவும், இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, அவருடைய குடும்பத்தினர் மற்றும் பா.ஜ.க.வின் ஒவ்வொரு தொண்டருக்கும் என்னுடைய இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். நாளை மாலை 3.30 மணியளவில் அவருடைய இறுதி சடங்குகள் நடைபெறும். அதற்கு முன்பாக, அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றார். இல.கணேசன், தமிழ் மீது தீராத பற்று கொண்ட பொற்றாமரை நாயகர் என தெரிவித்து அதுபற்றிய அறிக்கை ஒன்றை எக்ஸ் சமூக ஊடகத்தில் எச். ராஜா பகிர்ந்திருக்கிறார்.