இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி உண்ணாவிரத போராட்டம்
ராமேசுவரத்தில் 4-வது நாளாக விசைப்படகு மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
ராமேசுவரம்,
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையிலும், இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கடந்த 2 மாதத்தில் மட்டும் 55-க்கும் மேற்பட்ட பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் நேற்று அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் சார்பாக ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சுதந்திர தின நாளில் நேற்று மீனவர்கள் சட்டையில் தேசியக்கொடி குத்தியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டமானது மாலை 5 மணி வரை நடைபெற்றது.
அதேபோல மீனவர்களின் கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை என்றால் வருகின்ற 19-ந்தேதி அன்று தங்கச்சிமடத்தில் அனைத்து மீனவர்களும், மீனவ அமைப்புகளும் ஒன்று திரண்டு ரெயில் மறியல் போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்துள்ளனர்.
ராமேசுவரத்தில் 4-வது நாளாக விசைப்படகு மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 700-க்கும் அதிகமான விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.