மதுபானம் வாங்கி தர மறுத்ததால் ஆத்திரம் - காவலாளியை அடித்துக்கொன்ற வாலிபர்கள்

மதுபானம் வாங்கி தர மறுத்ததால் ஆத்திரத்தில் காவலாளியை அடித்துக்கொன்ற வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2025-08-16 06:41 IST

கோப்புப்படம் 

சென்னை புதுப்பேட்டை அண்ணா சாலை, வேலாயுத ஆச்சாரி தெருவைச் சேர்ந்தவர் கோபால் (68 வயது). இவர் தற்போது ஆவடி கன்னிகாபுரம் பெரியார் தெருவில் தங்கி, ஆவடி திருமலைராஜபுரம் பகுதியில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் மதியம் கோபால், ஆவடி காமராஜர் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் மது அருந்தினார். அங்கு ஏற்கனவே ஆவடி அடுத்த கொல்லுமேடு, ஒண்டி தெருவை சேர்ந்த தினேஷ் என்ற சீனு (26 வயது) மற்றும் ஆவடி ஸ்ரீதேவி நகர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜய் என்ற விஜயகுமார் (28 வயது) ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்தனர்.

அவர்கள் கோபாலிடம் பணம் இருப்பதை பார்த்து, அவரை ஆவடி, விளிஞ்சியம்பாக்கம் கலங்கல் பகுதியில் உள்ள சுடுகாடு அருகே அழைத்து சென்று அங்கு 3 பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர்.

அப்போது சீனு மற்றும் விஜயகுமார் இருவரும் கோபாலிடம் மேலும் மதுபானம் வாங்கி தரும்படி கேட்டனர். அதற்கு கோபால் மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் சேர்ந்து கோபாலை மூக்கு, தொண்டை பகுதியில் கையால் ஓங்கி குத்தியதுடன், கத்தியை பின்பக்கமாக திருப்பி கோபாலின் கழுத்து பகுதியில் ஓங்கி அடித்துள்ளனர்.

கோபாலுக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியதால் மயங்கி விழுந்தார். பின்னர் இருவரும் கோபாலை சாலையோரம் வீசிவிட்டு தப்பிச்சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஆவடி போலீசார் கோபாலை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், கோபால் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தினேஷ் மற்றும் விஜய் இருவரையும் கைது செய்தனர். கொலையான கோபாலுக்கு மனைவி, 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்