இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில மாநாடு: இன்று பங்கேற்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்பில் 2-வது நாளாக இன்று (சனிக்கிழமை) நடக்கும் மாநாடு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.;
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 26-வது மாநில மாநாடு சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள நேரு கலையரங்கத்தில் 4 நாட்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் முன்னிலை வகித்தார்.
காலை 9.30 மணிக்கு 25-வது மாநாடு நடைபெற்ற திருப்பூரில் இருந்து எடுத்து வரப்பட்ட கொடி பெறுதல் மற்றும் தியாகச்கூடர் பெறுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் சுதந்திர தினவிழாவையொட்டி முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
அதன்பிறகு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மூர்த்தி, மாநாடு கொடியை ஏற்றி வைத்தார். மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான டி.ராஜா கலந்து கொண்டு தொடக்க உரையாற்றினார்.
இதையடுத்து கனவுகள் மெய்ப்பட என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. தொடர்ந்து ‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்பில் 2-வது நாளாக இன்று (சனிக்கிழமை) நடக்கும் மாநாடு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
இதற்காக அவர் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வருகிறார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.