பொறியியல் மாணவர் சேர்க்கை: துணை கலந்தாய்வு 21-ந்தேதி தொடங்குகிறது
விண்ணப்பப் பதிவு நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.;
சென்னை,
தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைகான கலந்தாய்வு நடந்து வருகிறது. மொத்தம் 1,86,475 இடங்கள் இருக்கின்றன. இதில் 2 சுற்று கலந்தாய்வு முடிவில் 92,423 இடங்கள் நிரம்பி இருந்தன. இதனைத் தொடர்ந்து 3-வது சுற்று கலந்தாய்வு கடந்த 7-ந்தேதி தொடங்கியது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க 1,29,516 பேருக்கு அழைப்பு விடுக்கப்படிருந்தது.
கலந்தாய்வில் பங்கேற்று விருப்ப இடங்களை தேர்வு செய்தவர்களில் 64,629 பேருக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. அதில் 51,429 பேர் இடங்களை உறுதி செய்திருக்கின்றனர். 3-வது சுற்று கலந்தாய்வு வருகிற 20-ந்தேதியுடன் நிறைவு பெற உள்ளது. அன்றைய நாளில் 3-வது சுற்று கலந்தாய்வுக்கான இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட இருக்கிறது.
தற்போது 3-வது சுற்றில் இடங்களை உறுதி செய்தவர்களின் விவரங்களை வைத்து பார்க்கும்போது, 1,43,852 இடங்கள் வரை நிரம்பி இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து மீதமுள்ள இடங்களுக்கு ஏற்கனவே அறிவித்தபடி, துணை கலந்தாய்வு வருகிற 21-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்க இருக்கிறது.
இதற்கான விண்ணப்பப் பதிவு நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டு, 21-ந்தேதி கலந்தாய்வை தொடங்குவதற்கான பணிகள் நடப்பதாகவும், அது சற்று தாமதமானால், கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.