தூத்துக்குடி: நர்ஸ் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2.5 லட்சம் மோசடி செய்தவர் சென்னையில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு தெரியாத நம்பரில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.;
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு தெரியாத நம்பரில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பை ஏற்ற அந்த இளைஞரிடம் பேசிய மர்ம நபர் தான் ஒரு அரசு வேலை வழங்கும் அதிகாரி எனவும், அதற்கு பணம் செலவாகும் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பி அந்த இளைஞர் தனது மனைவிக்கு அரசு வேலை வாங்கித் தருமாறு கேட்டதையடுத்து மேற்சொன்ன மர்ம நபர் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் நர்ஸ் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சத்து 44 ஆயிரத்து 800 பணத்தை அந்த இளைஞரிடமிருந்து செல்போனில் பணம் அனுப்பும் செயலி மூலம் பெற்றுள்ளார்.
இதனையடுத்து அந்த இளைஞர் மேற்சொன்ன மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியாமல் போனதையடுத்து, தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்து, இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி. சகாயஜோஸ் மேற்பார்வையில், சைபர் குற்றப் பிரிவு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் பிச்சைகண்ணு (வயது 44) என்பவர் மேற்சொன்ன இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்சொன்ன சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் மேற்சொன்ன குற்றவாளி சென்னையில் இருப்பது கண்டறியப்பட்டு நேற்று முன்தினம் சென்னை சென்று அவரை கைது செய்து, தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.