ரசிகர் கொலை வழக்கு: நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்து- சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
நடிகர் தர்ஷன் ஜாமீனுக்கு எதிரான கர்நாடக அரசின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) நீதிபதிகள் ஜே பி பர்திவாலா மற்றும் ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அதில், தர்ஷன் உட்பட 7 பேருக்கு வழங்கிய ஜாமீனை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டின் உத்தரவு இயந்திரத்தனமாக உள்ளது என்றும், ஜாமீன் வழங்கப்பட்டு இருப்பது விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், சாட்சிகளும் மிரட்டப்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
தெரு நாய்கள் வழக்கு மறுவிசாரணை: சுப்ரீம்கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு
தெரு நாய்களை காப்பகங்களில் அடைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அனைத்து தரப்பினரும் எழுத்து பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை சுப்ரீம்கோர்ட்டு ஒத்திவைத்தது.
மேம்போக்கான வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டாம் என்றும், அரசின் செயலற்ற தன்மையால் இந்நிலை உருவாகியுள்ளது என்றும், தெரு நாய்கள் விவகாரத்தில் ஏற்கனவே விதிமுறைகளும் சட்டங்களும் உள்ளன, ஆனால் அவை முறையாக செயல்படுத்தப்படவில்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராகுல்காந்தி குற்றச்சாட்டு: "லட்சக்கணக்கான தேர்தல் ஊழியர்களின் நேர்மை மீதான தாக்குதல்.." - தேர்தல் ஆணையம்
காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் தேர்தல் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், “'வாக்குத் திருட்டு' போன்ற மோசமான சொற்களை பயன்படுத்தி தவறான கதையை உருவாக்க முயற்சிப்பது, கோடிக்கணக்கான வாக்காளர்கள் மீதான நேரடித் தாக்குதல் மட்டுமல்ல, லட்சக்கணக்கான தேர்தல் ஊழியர்களின் நேர்மையின் மீதான தாக்குதலும் கூட” என்று தெரிவித்துள்ளது.
சென்னை வடபழனியில் ஆகாய மேம்பாலம் அமைக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு
வடபழனியில் புதிதாக அமைய உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்தையும், பழைய ரெயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் ஆகாய நடை மேம்பாலம் அமைக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ.8.12 கோடி மதிப்பில் இப்பாலத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை எதிர்த்த வழக்கு - அபராதத்துடன் தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு
'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது.
வழக்கறிஞர் எம்.சத்தியகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறவும் அனுமதி மறுக்கப்பட்டது. முன்னதாக இதேபோன்ற வழக்கை சுப்ரீம்கோர்ட்டு ரூ.10 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளது என திமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் வில்சன் தனது வாததின்போது தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம், தொழில் முதலீடுகள் குறித்தும், ஆணவக் கொலையை தடுக்க சட்டம் இயற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மை பணியாளர்கள் அனுமதி பெற்று போராட தடையில்லை - சென்னை ஐகோர்ட்டு
தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதனை மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகல் விசாரிக்கப்படும் என நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனிடையே இந்த கைது சம்பவத்தின்போது, சட்டக்கல்லூரி மாணவர் காணாமல் போய்விட்டார் என வழக்கறிஞர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே தூய்மை பணியாளர்கள் போராட்டத்துக்கு மாற்று இடம் ஒதுக்கக் கோரி தலைமை நீதிபதி அமர்விலும் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, “போராட்டக் களத்தில் இருந்து அப்புறப்படுத்தும் போது காவல் துறையினர் அத்துமீறி செயல்பட்டுள்ளனர். அனுமதி பெற்று போராட்டம் நடத்த எந்த தடையுமில்லை. அனுமதி பெற்று போராட்டம் நடத்தும் போது அதை காவல் துறையினர் தடுத்தால் தலையிடலாம். அனுமதி பெறவில்லை என தூய்மை பணியாளர்கள் தரப்பில் தெரிவித்ததால் தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் எந்த மனுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தொடர் விடுமுறை.. சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு
தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சென்னையில் இருந்து மதுரை செல்ல ரூ.4,000 வரை கட்டணம் வசூல் செய்வதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். வழக்கமாக சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.600 ரூ800 ரூபாய் வரை ஆம்னி பேருந்து கட்டணம் வசூல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
சென்னையிலிருந்து நெல்லை, சேலம், திருச்சி வழித்தடங்களுக்கு ரூ.1,500 - ரூ.3,000 வரை கட்டணம் வசூல் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுதந்திர தின விழா: கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் தேமுதிக பங்கேற்பு
சுதந்திர தின விழாவை ஒட்டி கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் தேமுதிக பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், தலைமை நிலை செயலாளர் பார்த்தசாரதி மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்
தூய்மைப்பணியாளர்கள் கைது - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
வணக்கம் திரு. ஸ்டாலின் அவர்களே...
ரிப்பன் மாளிகை வாசலில், நள்ளிரவில் அடக்குமுறையை ஏவி , கொரானவின் போது கூட நம் குப்பைகளை நீக்கி சுத்தம் செய்த தூய்மை பணியாளர்களை அடித்து நொறுக்கி , அங்கிருந்து அகற்றி பல்வேறு இடங்களில் சிறை வைத்துள்ளனர் உங்கள் ஏவல்துறை.
யார் அவர்கள்? சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா? இல்லையே. ஏழை எளிய மக்கள்! அன்றாடம் தூய்மைப் பணி செய்து, சென்னை மாநகரை சுத்தமாக வைத்திருந்தவர்கள்.
நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அதற்கு நேர்மாறாக செயல்பட்டத்தைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் அறவழியில் போராடியது ஒரு தவறா?
அவர்களோடு டீ, காபி அருந்தியது போல் போட்டோஷூட் எடுத்துக்கொண்டீர்களே... அப்போது மட்டும் இனித்தது? இப்போது நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் கேட்கும் போது கசக்கிறதா?
எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் இருந்தபோது எழுதிய கடிதங்களில், எந்த வழக்கு இருந்தாலும், இவர்கள் பணி நிரந்தரம் செய்யுங்கள் என்று நாடகமாடினேரே, நினைவில் இருக்கிறதா?
"நள்ளிரவில் அடாவடித்தனமாக , வலுக்கட்டயாமாக நம் அரசுக்கும் மக்களுக்கும் பணி புரியும் , நலிவடைந்த தூய்மை பணியாளர்கள் மீது 79 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இது போன்ற ஒரு அடக்குமுறையை எந்த அரசும் ஏவியதில்லை.
தூய்மை பணியாளர்கள் 8 க்கும் மேற்பட்ட இடத்தில் சிறை வைக்கபட்டுள்ளார்கள் , அவர்கள் உடனடியாக விடுதலை செய்ய பட வேண்டும் எனவும் , இந்த அடாவடி நடவடிக்கைகளால் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் வலியுறுத்துகிறேன்
தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரை, வலியை, வேதனையை தமிழ்நாடே பார்த்து கலங்குகிறது. அவர்கள் சிந்திய ஒவ்வொரு கண்ணீருக்கும் நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். சொல்ல வேண்டிய காலம் அவ்வளவு தூரமெல்லாம் இல்லை. இன்னும் 8 மாதங்கள் தான்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.