இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025

Update:2025-08-14 10:18 IST
Live Updates - Page 4
2025-08-14 05:57 GMT

சுதந்திரதின விழா ஏற்பாடுகள் தீவிரம்.. தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிப்பு


நமது நாட்டின் 79-வது சுதந்திரதின விழா நாளை (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றுகிறார்.


2025-08-14 05:33 GMT

வட இந்திய மாநிலங்களில் கனமழை: வெள்ள பாதிப்பால் மக்கள் அவதி


நாட்டின் தலைநகர் டெல்லி உள்பட வட இந்திய மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இமாசல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கொட்டி தீர்த்த மழையால் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லியில் முக்கிய சாலைகளில் கூட முட்டளவுக்கு தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். டெல்லியில் இன்றும் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2025-08-14 05:32 GMT

ஆகஸ்ட் 14: பல லட்சம் அப்பாவி குழந்தைகளைக் கொன்று முஸ்லிம் லீக் வன்முறையைக் கட்டவிழ்த்த நாள் - கவர்னர் ஆர்.என்.ரவி


தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இன்று 'ஆகஸ்ட் 14' பாரதம் தனது 5,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில் ஒருபோதும் நடந்திராத சம்பவத்தை ஆழ்ந்த வேதனையுடன் நினைவுகூர்கிறது. பாரதத்தாயின் பல லட்சம் அப்பாவி குழந்தைகளைக் கொன்று. முஸ்லிம்களுக்கு ஒரு தனி நாடு என்ற அடிப்படையில் முஸ்லிம் லீக் அதன் வன்முறையைக் கட்டவிழ்த்தது. முஸ்லிம் லீக்கால் 'காஃபீர்கள்' என்று முத்திரை குத்தப்பட்டதால், பல்லாயிரம் ஆண்டுகளாக தங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த நிலத்திலிருந்து லட்சக்கணக்கானவர்கள் வேரறுக்கப்பட்டனர். பிரிவினையின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


2025-08-14 05:30 GMT

சென்னையை தொடர்ந்து ராமநாதபுரம், கடலூரில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

சென்னையை தொடர்ந்து ராமநாதபுரம், கடலூரில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ராமநாதபுரத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள தூய்மை பணியாளர்களை விடுவிக்க வலியுறுத்தியும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



2025-08-14 05:28 GMT

அரங்கம் அதிர்கிறதா..? 'கூலி' திரைப்படம் எப்படி இருக்கிறது..? திரை விமர்சனம்


திரை விமர்சனம்

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தனது ஆட்களுடன் தங்க கடத்தலில் ஈடுபட்டு வரும் நாகார்ஜுனா, தனது கூட்டத்தில் இருக்கும் கருப்பு ஆடுகளை வேட்டையாடி வருகிறார்.

அவருக்கு வலது கையாக சோபின் சாஹிர் இருக்கிறார். போலீசுக்கு தகவல் சொல்பவர்களை கொன்று, பின்னர் அந்த உடல்களை அப்புறப்படுத்துவதில் அந்த கும்பலுக்கு சிக்கல் வருகிறது. அந்த கூட்டத்தில் கூலியோடு கூலியாக ஒரு போலீஸ் உளவாளி இருப்பது தெரிய வருகிறது.


2025-08-14 05:23 GMT

நடிகை ஷில்பா ஷெட்டி மீது மோசடி வழக்குப்பதிவு

மும்பை தொழிலதிபர் தீபக் கோத்தாரி என்பவருக்குச் சொந்தமான நிறுவனத்துடன் தொடர்புடைய கடன் மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்தில் சுமார் ரூ.60.4 கோடி மோசடி செய்ததாக நடிகை ஷில்பா ஷெட்டி மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இது தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மும்பை காவல் நிலையத்தில் பொருளாதார குற்றப்பிரிவு மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2025-08-14 05:10 GMT

தைவானை உலுக்கிய ‘போடூல்’ புயல்: 400 விமானங்கள் ரத்து


கிழக்கு சீனக்கடலை மையமாக கொண்டு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலு கொண்டது. இந்த புயலுக்கு 'போடுல்' என தைவான் பெயரிட்ட நிலையில் அந்த தீவின் தென்கிழக்கு கரையோரம் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது. நேற்று போடுல் புயல் உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணியளவில் கரையை கடந்தது.


2025-08-14 05:07 GMT

சென்னையில் தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன..?


தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லை. இதன்படி தங்கம் ஒரு கிராம் தங்கம் ரூ.9,290க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.74,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 127க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,27,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


2025-08-14 05:05 GMT

சிஎஸ்கேவில் பிரேவிஸ்க்கு பதிலாக வேறு வீரரை எடுக்க திட்டமிட்ட நிர்வாகம்: முடிவு மாறியது எப்படி?


ஐபிஎல் போட்டிகளில் கடைசி சில ஆட்டங்களில் சிஎஸ்கே அணியில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவரும் குட்டி ஏபிடி என அழைக்கப்படுபவருமான பிரேவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். குர்ஜப்னீத் சிங் காயமடைந்ததால், அவருக்குப் பதிலாக பிரேவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரது அதிரடி ஆட்டம் சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.


2025-08-14 05:03 GMT

தூய்மை பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? - அரசுக்கு விஜய் கடும் கண்டனம்



எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றச் சொல்லித் தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகிறார்கள். அதை ஏன் இன்னும் நீங்கள் நிறைவேற்றவில்லை?. அப்படிக் கொடுத்த வாக்குறுதியை உங்களால் நிறைவேற்ற முடியாது எனில், ஏன் வாக்குறுதிகளைக் கொடுக்கிறீர்கள்?.

அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடுவதற்கு மாற்று இடம் வழங்கப்பட வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்