தர்மபுரி மாவட்ட வளர்ச்சிக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தர்மபுரி மாவட்ட மக்களும் தமிழ்நாட்டின் குடிமக்கள்தான் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;

Update:2025-08-17 01:11 IST

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தர்மபுரி மாவட்டத்தின் பெரும் பிரச்சினையே அங்கு வேளாண்மை, தொழில்துறை, சேவைத்துறை என எந்தத் துறையும் வலிமையாக இல்லாததுதான். அதனால்தான் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கும், வெளிமாவட்டங்களுக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதற்கு தீர்வு காணும் நோக்குடன்தான் தர்மபுரி மாவட்டத்தில் வேளாண்மையை வளர்க்கும் வகையில் தர்மபுரி மற்றும் காவிரி உபரி நீர் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரிலும், கடிதங்கள் வாயிலாகவும் பலமுறை வலியுறுத்தி உள்ளேன்.

சட்டப்பேரவையில் பா.ம.க. உறுப்பினர்களும் பலமுறை இக்கோரிக்கையை வலியுறுத்தினார்கள். ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை.

தர்மபுரி மாவட்ட மக்களும் தமிழ்நாட்டின் குடிமக்கள்தான். அவர்கள் செலுத்தும் வரியில்தான் அரசு செயல்பட்டு வருகிறது. முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் அனுபவிக்கும் பல்வேறு வசதிகளுக்கு செலவு செய்யப்படும் நிதியில் அவர்களின் வரிப்பணமும் உள்ளது.

இவற்றையெல்லாம் அனுபவித்துக்கொண்டு அவர்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காக அவர்களை பழிவாங்குவதும், அவர்கள் மீது வன்மத்தை காட்டுவதும் நியாயமல்ல.

அவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கைவிட்டு தர்மபுரி மாவட்ட வளர்ச்சிக்குத் தேவையான தர்மபுரி மற்றும் காவிரி உபரிநீர் திட்டம், சிப்காட் தொழில்வளாகம் ஆகியவற்றை செயல்படுத்த நிதிஒதுக்கீடு, தர்மபுரி மற்றும் மொரப்பூர் ரெயில் பாதை அமைக்க நிலம் கையகப்படுத்துதல் ஆகியவற்றுக்கான அறிவிப்புகளை நாளைய (இன்றைய) விழாவில் வெளியிடவேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்