பல பெண்களுடன் கணவருக்கு தொடர்பு: 12-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை
திருமணமான 10 மாதத்தில் 12-வது மாடியில் இருந்து குதித்து பெண் டாக்டர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஜோதீஸ்வரி (30 வயது). எம்.பி.பி.எஸ்., எம்.எஸ். படித்துள்ளார். மீனம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். சென்னை கோடம்பாக்கத்தில் வாடகைக்கு அறை எடுத்து வசித்து வந்தார். இவருக்கும், ராமநாதபுரத்தை சேர்ந்த யோதீஸ்வரன் (34 வயது) என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. என்ஜினீயரான யோதீஸ்வரன், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்மொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
திருமணம் முடிந்து கணவன்-மனைவி இருவரும் 3 மாதங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்தனர். அதன்பின்னர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் யோதீஸ்வரன், மனைவியை பிரிந்து சொந்த ஊருக்கே சென்று வீட்டில் இருந்தே பணிபுரிந்து வந்தார். அவ்வப்போது, மனைவியை பார்க்க வந்து சென்றதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சுதந்திர தின விழா விடுமுறை என்பதால், பெருங்களத்தூர் ஸ்ரீராம் கேட்டில் 12 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தனது சகோதரி முத்துலட்சுமி வீட்டுக்கு ஜோதீஸ்வரி சென்றார். பின்னர் மாலையில் தனது வீட்டுக்கு புறப்படுவதாக சொல்லிவிட்டு கிளம்பிய ஜோதீஸ்வரி, கீழே செல்லாமல் மேலே சென்றார். மொட்டை மாடிக்கு சென்றதும் தனது செருப்பு, கைப்பையை கழற்றி வைத்துவிட்டு 12-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில், தலையில் படுகாயம் அடைந்த ஜோதீஸ்வரி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்துவந்த பீர்க்கன்காரணை போலீசார் தற்கொலை செய்த ஜோதீஸ்வரி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஜோதீஸ்வரிக்கு திருமணம் ஆகி 10 மாதங்களே ஆவதால் இதுபற்றி தாம்பரம் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தற்கொலை செய்வதற்கு முன்பாக ஜோதீஸ்வரி எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-
யோதீஸ்வரன் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கஞ்சா பழக்கம் உள்பட பல்வேறு தீய பழக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். அத்துடன் டேட்டிங் செயலி மூலமாக 30-க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து அவர்களுடன் பழகி வந்துள்ளார்.
ஜோதீஸ்வரி, கணவரின் லேப்டாப்பை பரிசோதனை செய்தபோது, அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருக்கும் விஷயம் தெரிய வந்து மனம் உடைந்தார். இந்த நிலையில் கோடம்பாக்கத்தில் தாயுடன் அறை எடுத்து தங்கி இருந்த ஜோதீஸ்வரி, நேற்று அக்கா வீட்டுக்கு சென்றபோதுதான் இந்த சோக முடிவை எடுத்து உயிரை மாய்த்துக்கொண்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.