சென்னை: தெருநாய்களை காப்பகங்களில் அடைப்பதை எதிர்த்து விலங்குகள் நல வாரிய அமைப்புகள் பேரணி
நாடு முழுவதும் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.;
நாடு முழுவதும் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருநாய்களை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு விசாரணை மேற்கொண்டது. 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் நடைபெற்ற விசாரணையில் தலைநகர் டெல்லியில் உள்ள அனைத்து தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கும் உத்தரவை உறுதி செய்தது. அதேவேளை, விலங்குகள் கட்டுப்பாடு தொடர்பான நடைமுறைகளை அரசு அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை என்றும் அரசு அதிகாரிகளை கடுமையாக கோர்ட்டு எச்சரித்தது. மேலும், இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில், தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் விலங்குகள் நல வாரிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை எழுப்பூரில் விலங்குகள் நல வாரிய அமைப்புகள் சார்பில் இன்று அமைதி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் தெருநாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை கண்டித்து விலங்குகள் நல ஆர்வளர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.