குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - குளிக்க தடை

குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.;

Update:2025-08-17 18:29 IST

குற்றாலம்,

குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினமும் பெய்த மழையினால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் சிற்றருவி, புலியருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

நேற்று அரசு விடுமுறை என்பதால் பல்வேறுபகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. வெயில் என்பதே இல்லாமல் குளிர்ச்சியான சூழல் நீடித்தது.

மதியம் ஐந்தருவி, மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து சீராக தண்ணீர் விழுந்தது. அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இதுபோல் சிற்றருவி, புலியருவியிலும் சுற்றுலா பயணிகள் குளித்தனர்.

இந்த நிலையில், இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரித்து காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு கொண்டிருந்தனர். அப்போது அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தடுப்புகளை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. வெள்ளப்பெருக்கை அடுத்து அபாய ஒலி எழுப்பி குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை அவசர, அவசரமாக காவல்துறையினர் வெளியேற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

வெள்ளப்பெருக்கை அடுத்து மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அருவியின் நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்