தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது - திருமாவளவன்
பணி நிரந்தரம் என்பது குப்பையை அள்ளுபவனே அள்ளட்டும் என்பதற்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது என்று திருமாவளவன் கூறினார்.;
சென்னை,
சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், அமைச்சர் சேகர் பாபு, இயக்குனர் பாக்கியராஜ்,இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன். தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது என்று பேசியுள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் பேசியதாவது: -
, "தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் திமுக அரசை எதிர்த்து போராடவில்லை என நம்மை விமர்சிக்கிறார்கள். ஆனால் நான் போராட்ட களத்திற்கு சென்று, தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து முதல் அமைச்சரை சந்தித்து அவருடைய கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன். 13 நாட்களும் அமைச்சர்களுடனும், போராட்டக்காரர்களுடனும் நான் பேசிக்கொண்டிருந்தேன்.
இந்த விஷயத்தில் போராட்டக்காரர்களின் கோரிக்களை ஆதரிக்கிற அதே நேரத்தில், குப்பை அள்ளும் தொழிலை நிரந்தரப்படுத்தி, காலம் முழுவதும் நீங்கள் அதையே செய்துக்கொண்டிருங்கள் என்று சொல்வது நியாயம் அல்ல. குப்பை அள்ளும் பணியில் இருந்து அவர்களை மீட்க வேண்டும் என்பதே நம்முடைய கோரிக்கை. ஆனால் அவர்களுக்கான பணி நிரந்தரம் என்பது, 'குப்பையை அள்ளுபவர்களே அள்ளட்டும்' என்கிற கருத்திற்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது. ஆக பணி நிரந்தரம் செய்யக்கூடாது என்பதுதான் சரியான கருத்து. அதிலிருந்து அவர்களை மீட்க வேண்டும் என்பதுதான் சமூகநீதி. நீங்கள் காலம் முழுக்க குப்பை அள்ளுங்கள் என கூறுவது ஏற்புடையதல்ல. பணி நிரந்தரம் என்பது குப்பையை அள்ளுபவனே அள்ளட்டும் என்பதற்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது.
தலித் பிரச்சினை என்றால் திருமாவளவன் தான் பேச வேண்டும் என்று சொல்வதே சாதி புத்தி. ஏன் அதிமுக பேச கூடாதா? அவர்களுக்கு அந்த பொறுப்பு இல்லையா? தூய்மை பணியாளர் பிரச்சினைக்கு முதலில் சென்றது திருமாவளவன் தான். அங்கு என்ன பிரச்சினை என்று கூட தெரியாதவர்கள் இதில் திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள். இதில் நாம் தெளிவோடு எதிர்வினை ஆற்றாமல் கருத்தியலில் உறுதியாக இருக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.