வேளாண்சார் தொழில்களுக்கு மகத்தான எதிர்காலம்! - ஈஷா கருத்தரங்கில் தொழில் முனைவோர்கள் பேச்சு

தொழில் தொடங்குவோர் சமூக வலைத்தளங்களுடன், ஏஐ தொழில்நுட்பத்தையும் வணிகத்திற்காக பயன்படுத்த வேண்டும் என வசீகர வேதா நிறுவனத்தின் விஜயா மகாதேவன் தெரிவித்தார்.;

Update:2025-08-17 17:55 IST

ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் வேளாண் தொழில் முனைவோர்களுக்கான "அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா 2.O" எனும் பயிற்சி கருத்தரங்கு, காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (17-08-2025) நடைபெற்றது. மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்ற இவ்விழாவில் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் இல்லத்தரசிகள் உள்ளிட்ட 5,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவிற்கான விரிவான ஏற்பாடுகள் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

இதில் ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா வரவேற்புரை ஆற்றினார். சோழமண்டலம் முதலீடு மற்றும் நிதி நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் நரேந்திர குமார் மற்றும் மத்திய வேளாண் விரிவாக்க அலுவலகத்தின் இணை இயக்குநர் செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் பேசிய முன்னோடி தொழில் முனைவோர்கள் தங்களின் தொழில் அனுபவத்தை பகிர்ந்துகொண்டதுடன், வேளாண்சார் தொழில்களுக்கு மகத்தான எதிர்காலம் இருப்பதாக கூறினார்கள்.

எஸ்ஆர்எம் கல்விக் குழுமத்தின் துணைவேந்தர் பேராசிரியர். செ முத்தமிழ்ச்செல்வன் பேசுகையில், “வளமான நாட்டிற்கு வலுவான விவசாயம் என்பது அவசியம். விவசாயிகளை மேம்படுத்துதல், நிலையான விவசாய முறைகளை முன்னெடுத்தல், உணவு பாதுகாப்பு மற்றும் கிராமப்புற வளர்ச்சியின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தின் வேளாண்மைக் கல்லூரி மூலம் ஆராய்ச்சிகள் மற்றும் புத்தொழில் முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன.” என்றார்.

நபார்டு வங்கியின் பொது மேலாளர் ஹரி கிருஷ்ணன் பேசுகையில், “மதுரை வேளாண் வணிக வளர்ப்பு மையம் (MABIF) மூலம் தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள கிராமப்புற சிறுகுறு வேளாண்சார் தொழில் முனைவோர்கள் மற்றும் பெண்களுக்கு புதிய யோசனைகளை வணிகமாக மாற்ற உதவுதல், உபகரணங்கள் மற்றும் சந்தைப்படுத்தலில் ஆதரவினை வழங்கி வருகிறது. அதே போன்று சற்று வளர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவங்களுக்கு ‘நாப்கிஸ்ஸான் (NABKISSAN)’ மூலம் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும் ‘அக்ரி சூர் (Agri Sure)’ மூலம் முற்றிலும் வளர்ந்த நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அளவில் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும் நபார்டு, வங்கி ஈஷா மண் காப்போம் இயக்கத்துடன் இணைந்து செயல்பட உள்ளோம்.” என்றார்.

இதனையடுத்து வசீகர வேதா நிறுவனத்தின் விஜயா மகாதேவன் பேசுகையில், “மக்கள் எங்கு அதிகம் கூடுகின்றனரோ அங்கு தான் கடைகள் போடுவார்கள், அதே போன்று இன்று மக்கள் அதிகம் கூடும் இடமாக சமூக ஊடகங்கள் உள்ளன. புதிதாக தொழில் தொடங்குபவர்கள் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று சமூக வலைத்தளங்களுடன் AI தொழில்நுட்பத்தையும் வணிகத்திற்காக பயன்படுத்த வேண்டும். நம் பொருட்களை தரமாக தயாரிக்கும் போது அதனை நாமே எந்த தயக்கமும் இல்லாமல் துணிவுடன் சந்தைப்படுத்த முடியும்” என குறிப்பிட்டார்.

மதுரை தனா ஃபுட் புராடக்ட்ஸ் உரிமையாளர் தனலட்சுமி பேசுகையில், “ஒரு பாரம்பரிய அரிசி ரகத்தைக் கொண்டு சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான பிரத்யேக சத்துமாவு தயாரித்தோம். சத்துமாவில் தொடங்கிய எங்கள் தயாரிப்புகள், தற்போது 100 வகையான உணவுப் பொருள்களைக் கடந்து விட்டன. குழந்தைகளுக்கு உணவை மருந்தாக கொடுக்க மறந்து விட்டோம். அந்த மரபை நாங்கள் மீண்டும் கொண்டு வருகிறோம். இந்த தொழில் மனநிறைவை மட்டுமில்லாமல், வருமானத்தையும் கொடுத்தது. மதுரையில் துவங்கி தற்போது 8 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறேன்.” என தெரிவித்தார். மேலும் அவர் பல்வேறு பாரம்பரிய அரிசி ரகங்கள், அதன் பயன்கள் மற்றும் எவ்வாறு அதனை மதிப்பு கூட்டுவது குறித்து விளக்கினார்.

"சி சேஞ்ச் " வணிக ஆலோசனை நிறுவனத்தின் நிறுவனர் எம்.கே.ஆனந்த் பேசுகையில்,”உலகளவில் குறுசிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் 50 சதவீதம் பொருளாதாரத்தை அதிகரிக்கும் பிரதானக் காரணிகளாக உள்ளன. இந்த நிறுவனங்கள் நம் நாட்டின் மொத்த உற்பத்தியில் 30 சதவீதம் பங்காற்றுகிறது. அப்படிப் பார்க்கையில் இந்தியாவின் முதுகெலும்பு எம்எஸ்எம்இ யைச் சார்ந்துள்ளது.

ஒரு தொழில் துவங்குவதற்கு முன்பு ஒவ்வொருவரின் தனிச்சிறப்பு, சந்தையின் மதிப்பு, தொழில் செய்யும் முறை, நிதி ஆதாரங்கள், சரியான மூலப்பொருள் விற்பனையாளர்களை கண்டறிதல், சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவைகளை நாம் கவனித்து திட்டமிட்டு செயல்பட வேண்டும். புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு 10-க்கும் மேற்பட்ட அரசின் திட்டங்கள் இருக்கிறது. அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” எனப் பேசினார்.

கருத்தரங்கில் பணங்கருப்பட்டி மதிப்புகூட்டு பொருள்கள் குறித்து பாம் இரா ஃபுட்ஸ் நிறுவனர் கண்ணன், நஞ்சில்லா உணவு பொருட்கள் தயாரிப்பில் கொட்டும் லாபம் குறித்து சென்னை மை ஹார்வெஸ்ட் பார்ம்ஸின் அர்ச்சனா ஸ்டாலின், அக்ரி ஸ்டார்ட் அப் குறித்து ஆதி முதல் அந்தம் வரை பெரியகுளம் தோட்டக்கலை தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தின் வசந்தன் செல்வம், உலகத்தரத்திலான பிராண்டிங், பேக்கேஜிங் குறித்து மதுரையைச் சேர்ந்த பேக்கேஜிங் நிபுணர் அஸ்வின் உள்ளிட்டோர் துறை சார்ந்த நுட்பங்களையும், அவர்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

கருத்தரங்கு வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட வேளாண் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் சிறிய வேளாண் இயந்திரங்களின் கண்காட்சியும், விற்பனையும் நடைப்பெற்றது.

ஈஷா மண் காப்போம் இயக்கம் கடந்த 15 வருடங்களாக மண்ணின் வளத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து வருகிறது. இவ்வியக்கம் மூலம் இயற்கை விவசாயம் குறித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இவ்வியக்கம் மூலம் இதுவரை 35,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக

10,000 விவசாயிகளுக்கு மேல் இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்