சென்னை திரும்பும் மக்கள்: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.;
உளுந்தூர்பேட்டை,
சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடர் விடுமுறை வந்ததால், சென்னையில் வசிக்கும் தென்மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இவர்களில் சிலர் அரசு சார்பில் இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களிலும், ஆம்னி பஸ்களிலும், தங்களது சொந்த வாகனங்களிலும் புறப்பட்டு சென்றனர்.
இந்த நிலையில் தொடர் விடுமுறை முடிவடைந்ததையொட்டி சொந்த ஊருக்கு சென்றவர்கள் அரசு பஸ், தனியார் பஸ், கார், வேன் போன்ற பல்வேறு வாகனங்களில் இன்று சென்னைக்கு திரும்பி வருகின்றனர். ஒரே நாளில் சென்னைக்கு ஏராளமான வாகனங்கள் படையெடுத்து வருவதால், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்தபடியே சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் சுங்கச்சாவடி பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.