வெளி நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள் கோரும் தமிழ்ப் பாடப் புத்தகங்களை இலவசமாக அனுப்ப வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள் கோரும் தமிழ்ப் பாடப் புத்தகங்களை இலவசமாக அனுப்ப வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.;

Update:2025-08-17 15:49 IST

கோப்புப்படம்

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி. நாகரிகத்தை உலகிற்கு கற்றுத் தந்த மொழி தமிழ் மொழி, எத்தனையோ மொழிகள் உலகில் இருந்தாலும், அவற்றிற்கு எவ்லாம் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த. பழமைவாய்ந்த தாய் மொழியை பிற மாநிலங்களில் பயிலும் மாணவ, மாணவியர் கற்றுக் கொள்ள முடியாத அவல நிலையை தி.மு.க அரசு தற்போது ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் மொழி கற்க ஏதுவாக அங்கு செயல்படும் தமிழ் அமைப்புகளின் வாயிலாக தமிழ் வழிப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ் மொழியை வளர்க்கும் விதமாக, அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இவவசமாக தமிழ்ப் பாடப் புத்தகங்கள் அனுப்பப்பட்டு வந்தன.

ஆனால், இந்த ஆண்டு இன்னமும் தமிழ்ப் பாடப் புத்தகம் அனுப்பப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தமிழ்ப் பாடப் புத்தகங்களை அனுப்புமாறு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள் கடிதங்கள் எழுதி உள்ள நிலையில் பத்து தமிழ்ப் பாடப் புத்தகங்களை மட்டுமே இலவசமாக அனுப்ப முடியும் என்று தி.மு.க. அரசு சார்பில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு பாடநூல் கழக அதிகாரிகள், ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சம் ஐம்பது இலட்சம் ரூபாய் வரை தமிழ்ப் பாடப் புத்தகங்கள் அனுப்பப்படும் என்றும், காகித விலையேற்றம், கூலி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் செயல்படும் தமிழ் அமைப்புகளுக்கு தமிழ்ப் பாடப் புத்தகங்கள் அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. அரசின் நிதி நிர்வாகச் சீரழிவு காரணமாக, வெளி மாநிலங்களில் பயிலும் இலட்சக்கணக்கான மாணவ, மாணவியர் தமிழ் மொழியை பயிலும் வாய்ப்பை இழந்துள்ளனர். வெளி மாநில தமிழ்ப் பள்ளிகள் மூடப்படும் பரிதாப நிலை தள்ளப்பட்டுள்ளன. வெளி மாநிலங்களில் உள்ள தமிழ் அமைப்புகளால் இலட்சணக்கணக்கான ரூபாய் செலவு செய்து தமிழ்ப் பாடப் புத்தகங்களை வழங்குவது என்பது இயலாத காரியம். தமிழ் மொழி உலகெங்கும் வளர வேண்டுமென்றால் அதற்கான செலவினை தமிழ்நாடு அரசு தான் ஏற்க வேண்டும்.

பல ஆண்டுகளாக இலவசமாக வழங்கப்பட்டு வந்த தமிழ்ப் பாடப் புத்தகங்களை திடீர் என்று நிறுத்துவது எவ்விதத்தில் நியாயம்?. நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்திற்கு மூடுவிழா நடத்துவது கடும் கண்டனத்திற்குரியது. இதுதான் தமிழ் மொழியை வளர்க்கின்ற இலட்சணமா?.

2024-2025 ஆம் ஆண்டில் தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக பெருமையடித்துக் கொள்ளும் முதல்-அமைச்சர் அவர்கள், மத்திய அரசுக்கு வருவாயைப் பெற்றுத் தருவதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்று கூறிக்கொள்ளும் முதல்-அமைச்சர் அவர்கள், தமிழ் எங்கள் மூச்சு என்று அடிக்கடி விளம்பாப்படுத்திக் கொள்ளும் முதல்-அமைச்சர் அவர்கள், வெறும் ஐம்பது இலட்சம் ரூபாய் மதிப்பிலான தமிழ்ப் பாடப் புத்தகங்களை வெளி மாநிலங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு அனுப்புவதற்கு நிதி நெருக்கடியை கட்டிக்காட்டுவது தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று சொன்னால் அது மிகையாகாது.

மூத்த பொழியாம் தமிழ் மொழி வளர்க்கப்பட வேண்டுமென்ற எண்ணம் தி.மு.க. அரசுக்கு இருக்குமேயானால், தமிழ்நாட்டைத் தாண்டி, இந்தியாவைத் தாண்டி தமிழ் மொழி செல்ல வேண்டும் என்ற நோக்கம் தி.மு.க. அரசுக்கு இருக்குமேயானால், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள் கோரும் தமிழ்ப் பாடப் புத்தகங்களை இலவசமாக அனுப்பித்தர முதல்-அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்