சென்னையை தொடர்ந்து மதுரையிலும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நாளை முதல் காத்திருப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.;

Update:2025-08-17 14:29 IST

மதுரை,

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து, சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப்பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 10-க்கும் மேற்பட்ட நாட்கள் இந்த போராட்டம் நீடித்தது. இதனிடையே நள்ளிரவில் துய்மை பணியாளர்கள் அனைவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அப்போது சிலரை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். அப்போது போலீசாருடன் அவர்கள் வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 700 பெண்கள் உள்பட 950 பேரை 30 மாநகர பஸ் மூலம் போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை, வேளச்சேரி, நீலாங்கரை, தரமணி, தாம்பரம் உள்பட 12 மண்டபம் மற்றும் சமூக நலக்கூடங்களில் அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டு மாலை 5 மணிக்கு அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் எங்களின் போராட்டம் தொடரும் என்று தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், கடந்த 14-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் வீடு, காலை உணவு, சிறப்பு மருத்துவ சிகிச்சை, கல்விக் கட்டணம், உள்பட 6 புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தூய்மைப் பணியாளர் சங்கத்தினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை 15-ம் தேதி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தூய்மை பணியாளர்களின் நலன் காக்கும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக முதல்-அமைச்சருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

இந்த நிலையில், மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நாளை முதல் காத்திருப்பு போராட்டம் அறிவித்துள்ளனர். தனியார் நிறுவன ஒப்பந்தம் ரத்து, கொரோனா கால ஊக்கத்தொகை, தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். சென்னையில் தூய்மை பணியாளர்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தியிருந்த நிலையில், தற்போது மதுரையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்