தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல கூட்டணியை அமைப்பேன்: டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து சமுதாய மக்களுக்காகவும் நான் போராடுகிறேன் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.;

Update:2025-08-17 14:57 IST

சென்னை,

பாமக மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பட்டானூரில் உள்ள சங்கமித்ரா அரங்கில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக நிறுவனர் ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டதுடன், அவரே நீடிப்பார் என்றும், 37 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, அன்புமணி ராமதாஸ்தான் தலைவர் பொறுப்பு வகித்து வந்தார். மேலும், பொதுக்குழுவுக்கு நிறுவனரின் எழுத்துப்பூர்வ ஒப்புதலும், அவருக்கு அழைப்பும் விடுக்கப்பட வேண்டும் என்றும் கட்சியின் விதியில் திருத்தம் செய்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, வரும் 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்க ராமதாசுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

இதுவல்லவோ கூட்டம்; இதுவல்லவோ பொதுக்குழு என்ற அளவுக்கு கூட்டம் கூடியுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கூட்டம், காசு கொடுத்து கூட்டப்பட்டதல்ல. சொந்தமாக கூடிய கூட்டம். கூடியுள்ள உங்களை வாழ்த்த நல்ல வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறேன். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாமே தொண்டர்கள்தான்.

ஒரு சமுதாயத்திற்கு மட்டும் இங்கு தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து சமுதாயங்களுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வன்னியர் மட்டுமின்றி அனைத்து மக்களுக்காகவும் போராடுகிறேன். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து சமுதாயங்களும் என் பின்னால் வாருங்கள், நீங்கள் நினைப்பவை நடக்கும்.

10.5% இடஒதுக்கீடு, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முதல்-அமைச்சரை சந்தித்து பேராசிரியர் பாடம் எடுப்பது போல பாடம் எடுத்தேன். ஆனாலும் பயனில்லை. அரசு நினைத்தால் ஒரே வாரத்தில் நடத்தலாம். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த முடியும். சில மாநிலங்கள் அதனைச் செய்துள்ளன.

மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பை செய்ய வேண்டும் என சொல்லி தமிழக அரசு தட்டிக் கழிக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும்வரை போராடாமல் விடப்போவதில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை உடனே வழங்க முடியும். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன்.

கூட்டணி அமைப்பதற்கான முழு அதிகாரம் எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது; உங்கள் மனதில் இருப்பதை நான் அறிவேன். பாமக தொண்டர்களின் மனம் விரும்பும் நல்ல கூட்டணி நிச்சயம் அமையும். அது இயற்கையான கூட்டணி; வெற்றிக் கூட்டணி. நீங்கள் கொடுத்த அதிகாரத்தை சரியாக பயன்படுத்துவேன். அதில் உங்களுக்கு அனைத்தும் கிடைக்கும். இது வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்குழு. இதுபோன்ற பொதுக்குழுவை பாமக கண்டதில்லை. பாமக தொண்டர்களிடம் பேசியே எந்த முடிவும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்