காதல் விவகாரம்: மதுரையில் கார் ஏற்றி வாலிபர் கொலை

மனைவி ராகவி மேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.;

Update:2025-08-17 15:25 IST

மதுரை,

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பூதமங்கலத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் வயது 21. இவர் தும்பைபட்டி ராகவி (24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராகவிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் வாகன விபத்தில் இறந்த நிலையில், கணவரை இழந்த ராகவியை சதீஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டு திருச்சியில் வசித்து வந்தார்.

ஆனால் சதிஷுக்கு ராகவியை விட வயது குறைவு என்பதால் இவர்களின் திருமணத்திற்கு ராகவியின் பெற்றோர், உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து வீட்டில் இருந்த நகையை எடுத்துச் சென்று விட்டதாக ராகவி மீது பெற்றோர் மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இரு தரப்பினரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். அதன் பேரில் நேற்று இரு தரப்பினரும் விசாரணைக்கு வந்தனர். நள்ளிரவு 11:30 மணி வரை விசாரணை தொடரவே இரு தரப்பினரையும் போலீசார் நாளை (அதாவது இன்று) விசாரணைக்கு வருமாறு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து சதீஷ்குமார் இருசக்கர வாகனத்தில் மனைவி ராகவியை அழைத்துச் சென்றார். அய்யாபட்டி விலக்கு அருகே சென்றபோது ராகவியின் உறவினர்கள் பின்னால் காரில் சென்று இருசக்கர வாகனம் மீது மோதினர். இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி ராகவி படுகாயம் அடைந்தார்.

விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று சதீஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராகவியும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மேலூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்