கடந்த ஜனவரி முதல் ஜூலை வரையில் தேவையின்றி ரெயில்களில் அபாய சங்கிலியை இழுத்த 96 பேர் மீது வழக்கு

தேவையின்றி ரெயில் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.;

Update:2025-08-17 02:38 IST

சென்னை,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் 50-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 200-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே, பயணிகள் பாதுகாப்புக்காக ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் விதிமீறலில் ஈடுபடும் நபர்கள் மீது ரெயில்வே பாதுகாப்பு படையினர் வழக்கு பதிவு செய்து, அபராதம் விதித்து வருகின்றனர்.

ரெயில் நிலையத்துக்குள் தேவையின்றி சுற்றித்திரிபவர்கள் முதல் ரெயில் பயணிகளுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் ஆட்டோக்கள் நிறுத்துவது வரை பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் அவசர காலத்தில் நிறுத்துவதற்காக பயன்படுத்தும் அபாய சங்கிலிகளை தேவையின்றி இழுத்து நிறுத்துபவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. தேவையின்றி ரெயில் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தால் சம்பந்தப்பட்டோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரெயில்களின் அபாய சங்கிலியை தேவையின்றி இழுத்ததாக கடந்த 2023-ம் ஆண்டு 210 பேர் மீதும், 2024-ம் ஆண்டு 217 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். நடப்பாண்டில் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரையில் அபாய சங்கிலியை இழுத்து ரெயில்களை நிறுத்தியதாக 96 பேர் மீது வழக்குப்பதியப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்