இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 24-11-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 24 Nov 2025 12:03 PM IST
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான நத்தம் விஸ்வநாதன், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- 24 Nov 2025 11:47 AM IST
நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளிக் குழந்தைகளை விடுவிக்க போப் லியோ வேண்டுகோள்
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்குள் துப்பாக்கியுடன் ஆயுத கும்பல் நுழைந்தது. பின்னர் துப்பாக்கிமுனையில் 100-க்கும் மேற்பட்டோரை கடத்தி சென்றதாக தகவல் வெளியானது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் 303 குழந்தைகள் மற்றும் 12 ஆசிரியர்கள் கடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில், கடத்தப்பட்டவர்களில் சுமார் 50 குழந்தைகள் ஆயுதக்குழுவினரின் பிடியில் இருந்து தப்பி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளிக் குழந்தைகளை விடுவிக்க போப் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது;-
“கடத்தப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம் குறித்து நான் மிகுந்த வேதனையடைகிறேன். பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நான் மனதார வேண்டுகோள் விடுக்கிறேன். மேலும் அவர்களை உடனடியாக மீட்பதற்கு அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- 24 Nov 2025 11:44 AM IST
தென் ஆப்பிரிக்காவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் நிறைவு - நாடு திரும்பினார் பிரதமர் மோடி
ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக 3 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா சென்றார். ஜி20 உச்சிமாநாட்டில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
ஜி20 மாநாடு குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, “"ஜோகன்னஸ்பர்க் ஜி20 உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்களுடனான எனது சந்திப்புகள் பயனுள்ளதாக இருந்தன. இந்த சந்திப்புகள் பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தும். உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக தென்னாப்பிரிக்காவின் அற்புதமான மக்கள், அதிபர் ரமபோசா மற்றும் தென் ஆப்பிரிக்க அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார். தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துவிட்டு பிரதமர் மோடி இன்று நாடு திரும்பினார்.
- 24 Nov 2025 11:08 AM IST
தமிழகத்தில் 24 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம். தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி. திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 24 Nov 2025 11:04 AM IST
சட்டம் படிக்க விருப்பமா..? எக்கச்சக்க படிப்புகளும்... அவற்றின் விவரங்களும்
தமிழ்நாட்டில் சட்டம் படிக்க விரும்புபவர்கள், கண்டிப்பாக சட்டக் கல்வி பற்றிய அனைத்து விவரங்களையும் முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. சென்னையில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தோடு இணைந்து பல கல்லூரிகள் சட்டக் கல்வியை மாணவ மாணவிகளுக்கு கற்பித்து வருகின்றன.
- 24 Nov 2025 10:40 AM IST
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த்
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த கவாய் நேற்று ஓய்வு பெற்றதை தொடர்ந்து, நாட்டின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவியேற்றார். டெல்லி தர்பார அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், டெல்லி துணைநிலை கவர்னர், டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா ஆகியோர் பங்கேற்றனர். மேலும் மலேசியா, இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் பங்கேற்றனர். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் சுமார் 15 மாதங்கள் அதாவது 2027 பிப்ரவரி 9-ந்தேதி வரை பதவியில் இருப்பார்.
- 24 Nov 2025 10:07 AM IST
நீரில் மூழ்கும் நிலையில் குறுக்குத்துறை முருகன் கோவில்
நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் தாமிரபரணி நதியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறுக்குத்துறை முருகன் கோவில் முழுவதுமே நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது
- 24 Nov 2025 9:59 AM IST
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் இன்று காலை வரை தொடர்ந்து பலத்த மழை பெய்து வரும் நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மழை நீர் புகுந்துள்ளது. குழந்தைகள் வார்டு பகுதி, குழந்தைகள் வார்டு தீவிர சிகிச்சை பகுதி, இரத்த வங்கி மற்றும் பல்வேறு வார்டு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும் மருத்துவமனைக்குள் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ராட்சத பம்புகள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- 24 Nov 2025 9:57 AM IST
தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
தென்மேற்கு வங்கக் கடல், குமரிக்கடல், இலங்கைப் பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு-வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து, வரும் 27-ந்தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- 24 Nov 2025 9:56 AM IST
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கொலை வழக்கு; பவாரியா கொள்ளையர்களுக்கு இன்று தண்டனை அறிவிப்பு
கடந்த 2005-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்ட கும்மிடிப்பூண்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ சுதர்சனத்தின் வீட்டிற்குள் புகுந்த பவாரியா கொள்ளையர்கள், அவரை சுட்டுக்கொன்றுவிட்டு வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு போலீசார் ராஜஸ்தான், அரியானாவை சேர்ந்த 9 பவாரியா கொள்ளையர்களை கைது செய்தனர். கைதான 9 பேரில் 3 பேர் ஜாமீனில் வெளியாகி தலைமறைவான நிலையில், 2 பேர் சிறையிலேயே உயிரிழந்தனர்.
தற்போது சிறையில் உள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜாமீன் பெற்ற ஜெயில்தார் சிங் ஆகிய 4 பேர் வழக்கை சந்தித்து வருகின்றனர். இவர்கள் மீதான வழக்கில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை கூடுதல் நீதிமன்ற அமர்வு கடந்த 21-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. அவன்படி இவர்கள் மூவரும் குற்றவாளிகள் என கோர்ட்டு தீர்ப்பளித்தது. தொடர்ந்து, குற்றவாளிகளின் தண்டனை விவரங்களை 24-ந்தேதி(இன்று) கோர்ட்டு அறிவிக்க உள்ளது.














