
நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளிக் குழந்தைகளை விடுவிக்க போப் லியோ வேண்டுகோள்
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்குள் துப்பாக்கியுடன் ஆயுத கும்பல் நுழைந்தது. பின்னர் துப்பாக்கிமுனையில் 100-க்கும் மேற்பட்டோரை கடத்தி சென்றதாக தகவல் வெளியானது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் 303 குழந்தைகள் மற்றும் 12 ஆசிரியர்கள் கடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில், கடத்தப்பட்டவர்களில் சுமார் 50 குழந்தைகள் ஆயுதக்குழுவினரின் பிடியில் இருந்து தப்பி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளிக் குழந்தைகளை விடுவிக்க போப் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது;-
“கடத்தப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம் குறித்து நான் மிகுந்த வேதனையடைகிறேன். பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நான் மனதார வேண்டுகோள் விடுக்கிறேன். மேலும் அவர்களை உடனடியாக மீட்பதற்கு அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






