இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-07-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 12 July 2025 4:06 PM IST
ஏர் இந்தியா விமான விபத்து: முதற்கட்ட அறிக்கையை வைத்து எந்த முடிவுக்கும் வர வேண்டாம் - மத்திய அரசு
ஏர் இந்தியா விமான விபத்து பற்றி மத்திய மந்திரி ராம் மோகன் நாயுடு கூறும்போது, "விசாரணை அறிக்கையில் ஆரம்பகட்ட கண்டுபிடிப்புகள் மட்டுமே உள்ளன. இவ்விஷயத்தில் அவசரப்பட்டு நாம் எந்த ஒரு முடிவுக்கும் வந்து விடக்கூடாது என கூறியுள்ளார்.
- 12 July 2025 3:45 PM IST
தமிழகத்தில் கடந்த நான்கு வருடங்களில் லாக்கப்பில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்கும் வகையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை வைத்து, தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் சென்னை சிவானந்தா சாலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறுகிறது.
இதற்காக பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு, லாக்கப் மரணங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். நாளை நடைபெற உள்ள போராட்டத்திற்கு போலீசார் தடை விதிக்கலாம் என எண்ணி முன்னதாகவே அவர்களை அலுவலகத்திற்கு வரவழைத்துள்ளனர்.
- 12 July 2025 3:30 PM IST
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள காளி கோயில் காவலாளி, நகை திருட்டு குற்றச்சாட்டின் பேரில் தனிப்படை காவலர்களால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷை விசாரணை அதிகாரியாக மதுரை ஐகோர்ட்டு கிளை நியமனம் செய்தது. இந்த விசாரணையின் இடைக்கால அறிக்கையை விசாரணை அதிகாரி கடந்த 8 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதற்கிடையே, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று தமிழக அரசு கூறியிருந்தது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உயர் நீதிமன்றம், ஆக. 20 ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. தமிழக காவல் துறையினரிடம் இருந்து அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள், பிரிவு 103இன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
- 12 July 2025 1:55 PM IST
திருமலா பால் நிறுவன மேலாளர் வழக்கு: சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம்
ரூ.40 கோடி கையாடல் புகாரில் சிக்கிய திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சென்னை ஆணையர் அருண், “இதுவரை நடந்த விசாரணை அடிப்படையில் மேலாளர் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டி.சி. பாண்டியராஜன் தவறு செய்ததால் தான் துறை ரீதியாக விசாரணை நடத்தியிருக்கிறோம். அறிவுறுத்தலை மீறி ரூ.40 கோடி கையாடல் புகாரை டி.சி. பாண்டியராஜன் விசாரித்துள்ளார். சிவில் வழக்கு, பணம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் அனுமதி பெற்று தான் விசாரிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
- 12 July 2025 1:35 PM IST
நாளை மறுநாள் குடமுழுக்கு.. "களைகட்டும் திருப்பரங்குன்றம்"
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை மறுநாள் (14-ந் தேதி) மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.
- 12 July 2025 1:32 PM IST
பரபரக்கும் அரசியல் களம்... தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? - அதிமுக - பாஜக கருத்து மோதல்
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை திரைக்கு பின்னும், முன்னும் தொடங்கி உள்ளன.
- 12 July 2025 1:14 PM IST
எதிர்காலமும் நான்தான், நிகழ்காலமும் நான்தான்" - தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்
பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களுக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சமூகநீதியின் அடையாளமாகவும், அனைத்துத் தரப்பு மக்களின் பாதுகாவலனாகவும் திகழும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16-ஆம் நாள் 36 ஆண்டுகளை நிறைவு செய்து, 37-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த தருணத்தில் உலகெங்கும் வாழும் பாட்டாளி சொந்தங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 12 July 2025 1:10 PM IST
"ஓஹோ எந்தன் பேபி" திரைப்பட விமர்சனம்
உதவி இயக்குனரான ருத்ரா இயக்குனராகும் ஆசையில் விஷ்ணு விஷாலை சந்தித்து கதை சொல்கிறார். இரு கதைகளும் விஷ்ணு விஷாலுக்கு பிடிக்காமல் போக, தனது காதல் வாழ்க்கையையே கதையாக சொல்கிறார் ருத்ரா.
சந்தோஷமாக செல்லும் காதல் வாழ்க்கை, சில மனக்கசப்புகளால் உடைய இருவரும் பிரிந்து விட்டதையே கிளைமாக்ஸ் காட்சியாக சொல்லி முடிக்கிறார் ருத்ரா. ஆனால் விஷ்ணு விஷால். 'இது கிளைமேக்ஸ் கிடையாது. இதுதான் இடைவேளை. நீ உன் காதலியை மீண்டும் சந்தித்து விட்டு இரண்டாம் பாதியை படமாக்கு. கால்ஷீட் தருகிறேன்...' என்கிறார்.