எம்.எல்.ஏ. விடுதி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறையினர் மீது வழக்குப்பதிவு
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறையினர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி அறைக்குச் செல்லும் நுழைவு வாயிலுக்கு தலைமைச் செயலக ஊழியர்கள் பூட்டு போட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டின் பூட்டை உடைத்து அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடலில் நாளை மறுநாள் (18ம் தேதி) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியா வருகிறார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி
இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வரும் 18ம் தேதி சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இந்தியா வர உள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.
இருநாடுகள் இடையே நடைபெறும் 24வது சுற்று எல்லைப் பேச்சுவார்த்தை, சிறப்புப் பிரதிநிதிகள் மட்டத்தில் நடைபெறுவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக இது கருதப்படுகிறது.
ரூ.11,000 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் - பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
தலைநகர் டெல்லியில் 17-ந்தேதி(நாளை) நடைபெறும் நிகழ்ச்சியில், 2 பெரிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
மகத்தான மாற்றத்திற்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி- சசிகுமார்
'கத்துக்குட்டி', 'உடன் பிறப்பே' போன்ற படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'நந்தன்' . உண்மை கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் இதுவரை நாம் பார்த்திராத கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அமலாக்கத்துறை சோதனைகள் மூலம் தி.மு.க.வினரை அச்சுறுத்த முடியாது - கனிமொழி
தூத்துக்குடியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
"வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைகள் மூலமாக தி.மு.க.வினரை அச்சுறுத்த முடியாது. தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டு ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. தி.மு.க. அமைச்சர்களை ரெய்டுகள் மூலம் பயமுறுத்தலாம் என மத்திய பா.ஜ.க. அரசு நினைக்கிறது. மத்திய பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகளை தாக்கும் கருவியாக விசாரணை அமைப்புகள் மாற்றப்பட்டுள்ளது. எந்த பயமுறுத்தலாலும் தி.மு.க.வினரை அச்சுறுத்தி விட முடியாது."
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை தலைமைச் செயலகம்: அமைச்சர் ஐ.பெரியசாமி அறைக்கு செல்லும் நுழைவு வாயில் மூடல்
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி அறைக்குச் செல்லும் நுழைவு வாயிலுக்கு தலைமைச் செயலக ஊழியர்கள் பூட்டு போட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டின் பூட்டை உடைக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.. நாளை பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும் - ராமதாஸ் உறுதி
பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை 17.08.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு பாண்டிச்சேரி அருகில் உள்ள சங்கமித்ரா அரங்கில் திட்டமிட்டபடி நடக்கும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக சில விஷமிகள் வதந்தி பரப்புவதாக செய்தி வருகிறது. இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். எனது தலைமையில் நாளை 17.08.2025 ஞாயிற்றுக்கிழமை பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை. பொதுக்குழுவில் கலந்துகொள்ள வேண்டியவர்கள் அனைவரும் அவசியம் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இல.கணேசன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி
மறைந்த நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் உடல், ராணுவ மரியாதையுடன் பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் தற்போது அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் கவர்னர் இல.கணேசன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் கடிதம்
இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்கா உயர்த்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.