இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
''ராமாயணத்தில் அனுமனாக நடிப்பது பெரிய சவால்'' - சன்னி தியோல்
நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ராமாயணம் படத்தில் ராமராக ரன்பீர் கபூரும் சீதையாக சாய்பல்லவியும் நடிக்கின்றனர். அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் நடிக்கிறார்.
"பாடத்திட்டத்தில் நீதிமன்றம் தலையிடாது" - மதுரை ஐகோர்ட்டு
தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை பாடமாக சேர்க்க, தமிழாசிரியர்களை நிரந்தர பணியமர்த்த கோரி மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, கேந்திரிய வித்யாலயா பாடதிட்டத்தில் நீதிமன்றம் தலையிடாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
"எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது? - செல்வப்பெருந்தகை கேள்வி
சேலம் கம்யூனிஸ்ட் மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது:-
காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளை குறை கூற பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது?. பாஜகவின் வருங்காலத் திட்டங்கள் என்ன என்பது பழனிசாமிக்குத் தெரியாதா?. தமிழகத்தில் பாசிச சக்திகள் காலூன்ற ஜனநாயகத்தை சிதைக்க முயற்சிக்கிறார்கள்; பாசிச சக்திகளை ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் என்று கூறினார்.
சேலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் கொமதேக ஈஸ்வரன் பேசுகையில், “இந்தியா வளர வேண்டும் என்றால் உ.பி., குஜராத் மட்டும் வளரக் கூடாது. ஒட்டுமொத்த மாநிலமும் வளர வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியில் அதிக பங்கு அம்பானி, அதானியிடம் இருக்கிறது. அது ஏழைகளின் வளர்ச்சியா? என்று கூறினார்.
சித்தார்த் மல்கோத்ரா-ஜானவி கபூர் காதல் காட்சிக்கு எதிர்ப்பு.... வழக்கு பதிவு செய்ய கோரிக்கை
நடிகர் சித்தார்த் மல்கோத்ரா -ஜான்விகபூர் ஆகியோர் 'பரம்சுந்தரி' என்ற படத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 29-ம் தேதி திரைக்கு வர உள்ளநிலையில், டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.
டிரெய்லருக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு இருந்தபோதிலும், கிறிஸ்தவ அமைப்பாளர் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தெலங்கானாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபர்
தெலங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் உள்ள கடெம் அணையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார். இந்த அதிர்ச்சி தரும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. கடெம் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததால், அதன் கதவுகள் திறக்கப்பட்டன.அப்போது, அணையின் நீர்வரத்தைக் காண வந்திருந்த கன்னாபூர் கிராமத்தைச் சேர்ந்த திப்பி ரெட்டி கங்காதர் என்ற இளைஞர், வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார்.
சென்னையில் 10 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளருமான ஐ. பெரியசாமியின் திண்டுக்கல் மற்றும் சென்னை வீடுகள், அவரது மகனும், பழனி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஐ.பி.செந்தில்குமார் வீடு, மகள் இந்திரா வீடுகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கடந்த 10 மணி நேரமாக சென்னையில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது. இருப்பினும் திண்டுக்கல்லில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
தேர்தல் ஆணையம் சார்பில் நாளை செய்தியாளர் சந்திப்பு
வாக்குத் திருட்டு, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவகாரங்கள் நாடு முழுவதும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் நாளை (ஆக.17) தேர்தல் ஆணையம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் SIR, வாக்குத் திருட்டு விவகாரங்களை மக்களிடம் கொண்டு செல்ல, 'வாக்குரிமை யாத்திரை' என்ற பெயரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை பீகாரில் பயணத்தை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓட்டுத் திருட்டு விவகாரம்: கோவையில் நூதன போராட்டம்
ஓட்டுத் திருட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியையும், தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து கோவையில் முற்போக்கு அமைப்புகள் இணைந்து முகமூடி கொள்ளையன் வேடமணிந்து நூதன போராட்டம் நடத்தினர்.
அமேசான் பிரைம் வீடியோவில் இந்த வாரம் வெளியான படங்கள்...!
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. இந்த சுதந்திர தின வார இறுதியில், அமேசான் பிரைம் வீடியோவில் பல படங்கள் வெளியாகி இருக்கின்றன.
வெளியானது ' வாழ 2' பட கிளிம்ப்ஸ்...வைரல்
''வாழ'' படம் வெளியாகி 1 வருடம் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக ''வாழ 2'' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இருக்கிறது.