ராப் பாடகர் வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் புகார்
கேரளாவை சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன் மீது மேலும் இரு பெண்கள் பாலியல் புகாரளித்துள்ளனர். பெண் மருத்துவர் அளித்த பாலியல் புகாரில் வேடன் தலைமறைவாக உள்ள நிலையில் மேலும் 2 பெண்கள் பாலியல் புகாரளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சு
துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க. சார்பில் தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவரும், மராட்டிய கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது ராஜ்நாத் சிங், துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
''எனது குடும்பமும் ஒரு காலத்தில்...'' - உணர்ச்சிவசப்பட்ட ராகவா லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ் யாரேனும் சிக்கலில் இருந்தால் உடனடியாகச் செயல்பட்டு தான் நிறுவிய மாற்றம் அறக்கட்டளை மூலம் பலருக்கு உதவி வருகிறார். சமீபத்தில், ஒரு ஏழை மாணவியின் கஷ்டங்களைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டார்.
ரஜினிகாந்துடன் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கடந்த 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி வெளியான 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் மூலமாக ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமானார். இந்த நிலையில் திரையுலகில் 50 ஆண்டுகளை ரஜினிகாந்த் நிறைவு செய்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் இதுவரை 171 திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.
திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்துக்கு பல்வேறு நடிகர்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தை சார்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு துணை ஜானாதிபதியாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தை சார்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறினார்.
''தமிழ் படங்கள் இன்னும் ரூ.1,000 கோடி வசூலிக்காததற்கு இதுதான் காரணம்'' - ஏ.ஆர்.முருகதாஸ்
இதற்கு முன்பு பல வெற்றி படங்களை இயக்கியுள்ள ஏ.ஆர்.முருகதாஸ், சமீபத்தில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறார். இவர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி படத்தை இயக்கி இருக்கிறார். இப்படம் அடுத்த மாதம் 5 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் புரமோஷனின்போது பேசிய அவர், தமிழ் படங்கள் ரூ.1,000 கோடி கிளப்பில் நுழையத் தவறியதற்கு விளக்கம் அளித்தார்.
10 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் தமிழ்நாட்டு மண்ணில் நிகழும் - த.வெ.க. தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு வருகிற 21-ந்தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. மாநில மாநாட்டை முன்னிட்டு த.வெ.க. தொண்டர்களுக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர், "மாநாட்டுக்கு வரும்போதும், மாநாடு நிறைவடைந்து ஊருக்குத் திரும்பும்போதும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகம், தகுதியும் பொறுப்பும் மிக்க ஓர் அரசியல் பேரியக்கம் என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது நமது தலையாய கடமை. மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் நம் தமிழ்நாட்டு மண்ணில், நம்மால் நிகழப் போவது நிஜம். எனவே, அத்தகைய மாபெரும் அரசியல் விளைவை நிச்சயமாக நிகழ்த்திக் காட்டும் பேரறிவிப்பாக நமது மாநில மாநாட்டை மாற்றிக் காட்டுவோம்" என்று தெரிவித்துள்ளார்.
துணை ஜனாதிபதி தேர்தல் போட்டிக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் சரியான தேர்வு - அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
இந்திய துணை ஜனாதிபதி பதவிக்கு செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்தவரும், மராட்டிய மாநில கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு வாழ்த்துகள் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
குற்றால அருவிகளில் குளிக்க 3-வது நாளாக தடை நீட்டிப்பு
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் குற்றாலம் பிரதான அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு 3-வது நாளாக இன்றும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.