ஈரோட்டில் 25-ந் தேதி முதல் ராணுவத்துக்கு ஆட்கள் சேர்ப்பு
ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் ராணுவத்துக்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.;
ஈரோடு,
ராணுவத்துக்கு ஆட்கள் சேர்ப்பு
இந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஆட்கள் சேர்ப்பு முகாம் வருகிற 26-ந்தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி வரை ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை மற்றும் தேனி ஆகிய 11 மாவட்டங்களில் இருந்து அக்னிவீர் ஜெனரல் டூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் கிளர் -ஸ்டோர் கீப்பர், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
மேலும், மத்திய வகைகள் சிப்பாய் தொழில்நுட்ப நர்சிங் உதவியாளர், சிபாய் பார்மா, ஹவில்தார், ஜூனியர் கமிஷன் அதிகாரி ஆகிய பதவிகளுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.
தொழில்நுட்பம்
அக்னிவீர் ஜி.டி. வகைக்கு, வருகிற 26-ந்தேதி தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்தோருக்கும், 27-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தோருக்கும், 28-ந்தேதி கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மற்றும் மதுரை மாவட்டங்களை சேர்ந்தோருக்கும், 29-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தோருக்கும் ஆட்கள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
அக்னிவீர் ஜிடி, கிளர்க் -எஸ்.கே.டி.டி. வகைக்கு வருகிற 31-ந்தேதி கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தேனி மற்றும் மதுரை மாவட்டங்களை சேர்ந்தோருக்கும், அக்னிவீர் ஜி.டி., தொழில்நுட்பம் வகைக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதி நாமக்கல், தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தேனி மற்றும் மதுரை மாவட்டங்களை சேர்ந்தோருக்கும், அக்னிவீர் ஜி.டி., தொழில்நுட்பம் வகைக்கு 2-ந்தேதி கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி மற்றும் மதுரை மாவட்டங்களை சேர்ந்தோருக்கும் முகாம் நடக்கிறது.
மத்திய வகைகள் 3 மற்றும் 4-ந்தேதிகளில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கும் ஆட்கள் சேர்ப்பு முகாம் நடக்கிறது. 5-ந்தேதி மருத்துவ பரிசோதனைகள் நடைபெற உள்ளது. 6 மற்றும் 7-ந்தேதி ஒதுக்கீட்டு நாட்கள் ஆகும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி அட்டைகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.