70 சப்-இன்ஸ்பெக்டர், 148 போலீஸ்காரர் பணியிடங்களை நிரப்ப தேர்வு-இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
புதுவை காவல்துறையில் 70 சப்-இன்ஸ்பெக்டர், 148 போலீஸ்காரர் பணிக்கான தேர்வு நடக்கிறது.;
கோப்பு படம்
புதுச்சேரி,
புதுவை காவல்துறையில் 70 சப்-இன்ஸ்பெக்டர், 148 போலீஸ்காரர் பணிக்கான தேர்வு நடக்கிறது. இன்று (புதன்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக புதுச்சேரி காவல்துறை சிறப்பு அதிகாரி ஏழுமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள போலீசார், ஊர்காவல் படை வீரர்கள் ஆகிய பணிகள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது 70 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 23 பேர் பெண்கள் ஆவர். இதே போல் 148 போலீஸ்காரர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. இதில் 100 பேர் ஆண்கள். 48 பேர் பெண்கள் ஆவர்.
தகுதி வாய்ந்த புதுச்சேரியை சேர்ந்த ஆண், பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் இன்று (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 12-ந் தேதி மாலை 3 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
உடல் தகுதி தேர்வு
இடஒதுக்கீடு, வயது, கல்வித்தகுதி, தேர்வு செய்யும் முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அறிவிப்பு ஆணையில் வெளியிடப்பட்டுள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்ட படிப்பு அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். போலீஸ்காரர் பணிக்கு பிளஸ்-2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். முதலில் உடல் தகுதி தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக எழுத்து தேர்வு நடைபெறும். சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு முந்தைய அறிவிப்பு ஆணை தேதி 8.11.2022ன் படி விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கான அறிவுறுத்தல் அரசு இணைய தளத்தில் பின்னர் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.