இந்திய விமானப்படையில் சேர ஆசையா? தாம்பரத்தில் ஆட்சேர்ப்பு முகாம்: தேதி அறிவிப்பு
‘அக்னிவீர்வாயு’ திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் சேர தாம்பரத்தில் ஆட்சேர்ப்பு முகாம் வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.;
சென்னை,
திருமணம் ஆகாத இளைஞர்களை ‘அக்னிவீர்வாயு’ திட்டத்தின் கீழ் சேர்ப்பதற்காக இந்திய விமானப்படை சென்னை தாம்பரத்தில் ஆட்சேர்ப்பு முகாமை நடத்துகிறது. இதில் வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில், தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்களுக்கு இந்த தேர்வுகள் நடக்கிறது. கேரளா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்களுக்கு வருகிற 30 மற்றும் 31-ந்தேதிகளில் நடக்கிறது.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, ஏனாம், அந்தமான்-நிகோபார் மற்றும் லட்சத்தீவுகள் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆண்களுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந்தேதி தொடங்கி 3-ந்தேதி வரை 2 நாட்கள் நடக்கிறது. செப்டம்பர் 5 மற்றும் 6-ந்தேதிகளில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பெண் விண்ணப்பதாரர்கள் தகுதித்தேர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் ஆட்சேர்ப்புத் தேர்வுகள் நடைபெறும் தேதிகளில் அந்தந்த இடத்திற்கு நேரில் சென்று அந்த இடத்திலேயே விண்ணப்பிக்கலாம். ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்குமான தேர்வுகள் சென்னை, தாம்பரம், விமானப்படை நிலையத்தில் உள்ள, ஏர்மேன் தேர்வு மையத்தில் நடக்கிறது.
விண்ணப்பதாரர்கள், கடந்த 2005-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் 2008-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதிக்குள் பிறந்தவர்கள் இந்த தேர்வில் பங்கேற்க தகுதியுடையவர்கள். மத்திய, மாநில அல்லது யூனியன் பிரதேசங்களால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் இருந்து ஏதேனும் ஒரு பிரிவில் 10, பிளஸ் 2 அல்லது அதற்கு சமமான தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
என்ஜினீயரிங் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கணினி அறிவியல், இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னாலஜி அல்லது தகவல் தொழில்நுட்பம்) பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். மேற்கண்ட தகவல்கள் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.