மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை: ஒரே நாளில் 5 அடி உயர்ந்த சேர்வலாறு அணை நீர்மட்டம்

பாபநாசம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு உயர்ந்துள்ளது.;

Update:2025-08-19 07:40 IST


நெல்லை, தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 1 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு உயர்ந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரத்து 118 கனஅடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் நீர்மட்டம் 118.55 அடியாக இருந்தது. இந்த நிலையில், நேற்று நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 119.75 அடியாக உள்ளது.

சேர்வலாறு அணை

சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 118.11 அடியாக இருந்தது. நேற்று நீர்மட்டம் 123.52 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 5 அடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை பகுதியில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நாலுமுக்கு மற்றும் ஊத்து பகுதிகளில் தொடர்ச்சியாக 3 நாட்கள் மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி நாலுமுக்கில் 7 சென்டிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 6 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. காக்காச்சியில் 5 சென்டிமீட்டரும், மாஞ்சோலையில் 5 சென்டிமீட்டரும் மழைபதிவாகியது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

குண்டாறு, அடவிநயினார் அணைகள்

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை பகுதியில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. குண்டாறு, அடவிநயினார் அணைகள் நிரம்பி வழிகிறது. கடனாநதி அணை நீர்மட்டம் 67 அடியாகவும், ராமநதி அணை 72 அடியாகவும், கருப்பாநதி அணை 61 அடியாகவும் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்