ஒகேனக்கல், மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை இந்தாண்டில் 5-வது முறையாக நிரம்ப வாய்ப்பு உள்ளது.;
மேட்டூர்,
தென்மேற்கு பருவ மழையின் காரணமாக கர்நாடக மற்றும் கேரள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டின. இதைத்தொடர்ந்து இந்த 2 அணைகளில் இருந்தும் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. நேற்று மதியத்திற்கு மேல் வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் உபரியாக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளிலும், காவிரி கரையோரமும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணைக்கு நேற்று மதியம் முதல் அதிகரிக்க தொடங்கியது. இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்தது. இதன்காரணமாக அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீா்மட்டம் 117.50 அடியாக உள்ளது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை இந்தாண்டில் 5-வது முறையாக நிரம்ப வாய்ப்பு உள்ளது. இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு உள்பட காவிரி கரையோரம் உள்ள 11 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.