ஆபரேஷன் சிந்தூரில் சிறப்பாக செயல்பட்ட இளையான்குடியை சேர்ந்த ராணுவ வீரருக்கு தங்கப்பதக்கம்
ஆபரேஷன் சிந்தூரில் சிறப்பாக செயல்பட்ட இளையான்குடியை சேர்ந்த ராணுவ வீரருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.;
சிவகங்கை,
காஷ்மீர் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப் பட்டனர் இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் இந்தியா கடந்த மே மாதம் 7-ந் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும் பயங்கரவாதிகளும் இந்தியாவின் தாக்குதலில் கொல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை ஏற்பட்டது. இந்த சண்டை 4 நாட்கள் நீடித்தது. அதன்பிறகு இருநாட்டு இடையேயும் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில், இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் பாகிஸ்தான் அனுப்பிய நவீன டிரோன்களை செயலிழக்க செய்து வீழ்த்திய கமாண்டோ வீரர் கந்தனை கவுரவிக்கும் விதமாக மிக உயரிய வீரதீர செயலுக்கான தங்கப்பதக்கத்தை சுதந்திர தின விழாவில் இந்திய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி வழங்கி உள்ளார்.
தங்கப்பதக்கம் பெற்ற ராணுவ வீரர் கந்தன் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், முத்தூர் கிராம ஊராட்சி குறிச்சி கிராமத்தை சேர்ந்த தங்கவேல்- லட்சுமி தம்பதியின் மகன் ஆவார். தங்கப்பதக்கம் பெற்ற கமாண்டோ வீரர் கந்தனுக்கு குறிச்சி கிராம பொதுமக்களும், சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர் சங்க தலைவர் பாக்யராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.