இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தேர்வு ஒத்திவைப்பு
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தேர்வு மாலை நடைபெறவிருந்தது.;
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 26-வது மாநில மாநாடு சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள நேரு கலையரங்கத்தில் கடந்த 15ம் தேதி தொடங்கியது. 4 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மூர்த்தி, பொதுச்செயலாளர் டி.ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டின் இறுதி நாளான இன்று புதிய மாநில செயலாளர், நிர்வாகக்குழு, செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, 101 பேர் மாநிலக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தேர்வு மாலை நடைபெறவிருந்தது. அப்போது, மாநில செயலாளராக உள்ள முத்தரசன் தரப்பிற்கும், கட்சியின் மூத்த தலைவரும் திருப்பூர் எம்.பி.யுமான சுப்பராயன் தரப்பிற்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த சம்பவம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.