மதுரையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் - 3ம் கட்ட பேச்சு தோல்வி
சென்னையை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் பரவி வருகிறது.;
மதுரை ,
மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டம் அறிவித்துள்ளனர். தனியார் நிறுவன ஒப்பந்தம் ரத்து, கொரோனா கால ஊக்கத்தொகை, தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக நேற்று தெரிவித்திருந்தனர். சென்னையில் தூய்மை பணியாளர்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தியிருந்த நிலையில், தற்போது மதுரையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னையை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் பரவி வருகிறது. இந்த நிலையில் மதுரை, நெல்லை, நாகை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக மதுரை மாநகராட்சி அலுவலகத்துக்கு செல்லும் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டுள்ளன. அங்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக மாநகராட்சி சார்பில் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில், மதுரையில் தூய்மை பணியாளர்களிடம் 3-ம் கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. தூய்மை பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.