மதுரை: போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது

3-ம் கட்ட பேச்சு வார்த்தை தோல்வியடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.;

Update:2025-08-18 21:36 IST

மதுரை ,

மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தனியார்மய அரசாணையை ரத்து செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி, மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணிகளில் தனியார்மயத்தை புகுத்தும் அரசாணை 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வேண்டும்.

மதுரை மாநகராட்சியில் அவர் லேண்ட் தனியார் நிறுவனம் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்துப் பிரிவு பணியாளர்களுக்கும் தீபாவளி பண்டிகை போனஸாக ஒரு மாதம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை விலக்கிக் கொள்ளப்போவதில்லை என்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

சென்னையை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் பரவி வருகிறது. இந்த நிலையில் மதுரை, நெல்லை, நாகை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக மதுரை மாநகராட்சி அலுவலகத்துக்கு செல்லும் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டுள்ளன. அங்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக மாநகராட்சி சார்பில் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்தது.

இதனையடுத்து தூய்மை பணியாளர்களிடம் 3-ம் கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. தூய்மை பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், 3-ம் கட்ட பேச்சு வார்த்தை தோல்வியடைந்த நிலையில் மதுரை மாநகராட்சி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்