கன்னியாகுமரியில் 3 வட்டங்களுக்கு 20-ம் தேதி உள்ளூர் விடுமுறை
மகான் ஸ்ரீநாராயண குருவின் பிறந்த தினத்தை முன்னிட்டு 20.08.2025 (புதன்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு மற்றும் திருவட்டார் ஆகிய மூன்று வட்டங்களில் இயங்கும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 35,000 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 22,000 கன அடியில் இருந்து 35,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. விநாடிக்கு 20,000 கன அடி நீர் வரும் நிலையில், அருவி மற்றும் ஆற்றின் கரையோரம் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
ராயபுரம் மண்டலம் போஜராஜன் நகரில் 30.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வாகனச் சுரங்கப்பாதையினை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
''ஹீரோ நான்தான்...ஆனால் அந்தப் படம் ஸ்ரீதேவியாலதான் ஹிட்டானது'' - நாகார்ஜுனா
ஜகபதி பாபு தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்ட நாகார்ஜுனா, தனது சினிமா வாழ்க்கை பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
தலைமைத் தேர்தல் ஆணையரின் பேட்டி கூடுதல் கேள்விகளை எழுப்பியிருக்கிறது: மு.க.ஸ்டாலின்
இந்தியா கூட்டணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் - 19.08.2025
சென்னையில் நாளை (19.08.2025) காலை 09:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை அத்தியாவசிய பராமரிப்பு பணியின் காரணமாக சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. மாலை 5:00 மணிக்கு பின் பணிகள் நிறைவடைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் அளிக்கப்பட இருக்கிறது.
அன்புமணியிடம் விளக்கம் கேட்டு ராமதாஸ் தரப்பு நோட்டீஸ்
பா.ம.க. பொதுக்குழுவில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து, அன்புமணியிடம் விளக்கம் கேட்டு ராமதாஸ் தரப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், 7 நாட்களில் விளக்கம் அளிக்காவிட்டால் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், நோட்டீஸ் கிடைத்தாலும் எந்த பதிலும் அளிக்க போவதில்லை என அன்புமணி ராமதாஸ் தரப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த கீழமை நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டடுள்ளது.